முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

முடிந்துவிட்டதா திமுகவின் தேனிலவு காலம்?


மரிய ரீகன் சாமிக்கண்ணு

கட்டுரையாளர்

திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டைக் கடந்துவிட்டது. திமுக தனது சாதனை பட்டியல்களை ஒரு பக்கம் வாசித்துக்கொண்டிருக்க மற்றொரு புறம் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களையும் அறிவிக்கின்றன.

தேர்தல் அறிக்கை… வாக்குறுதி… போராட்டம்…

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

திமுக ஆட்சிக்கு வந்ததற்கு அரசு ஊழியர்களின் பங்களிப்பு அல்லது ஆதரவு மிக முக்கியமானது. அவர்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பல கட்டமாக அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். ஆனால், அரசு அவர்களின் கோரிக்கையை கேட்கவில்லை. அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டிய வாக்குறுதியை தமிழ்நாட்டின் நிதி நிலையைக் காரணம் காட்டி, திமுக அரசு கைவிட்டுவிட்டது. அதே போல், அரசு பொதுப்போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன. அண்மையில் அரைகுறையாக ஒப்பந்தம் போட்டு அவர்களின் போராட்ட உணர்வுக்கு ஆட்சியாளர்கள் வடிகால் அமைத்துக்கொடுத்துள்ளனர்.

அடுத்ததாக நம் கண் எதிரே தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். மின்சார துறை தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறார்கள். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தமது கோரிக்கைக்காக மீண்டும் போராட்டத்தைக் கையில் எடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டங்களுக்கெல்லாம் காரணம், தேர்தல் வாக்குறுதிகளை திமுக கைவிட்டது தான். இந்த கோரிக்கைகளை தோற்றுவிக்க கூடிய கொள்கைகளை ஆட்சியாளர்கள் அறிவித்ததே காரணமாக விமர்சிக்கப்படுகிறது. ஆட்சி மாறினாலும் அரசின் அணுகுமுறை மாறாததால் பல்வேறு அமைப்புகளின் அதிருப்தி போராட்டமாக உருவெடுத்துள்ளது. இதனால், கடந்த ஓராண்டாக திமுக அரசுக்கு எதிராக எந்த விமர்சனத்தையும் முன்வைக்காத அமைப்புகள் அடுத்தடுத்து போராட்டங்களைக் கையில் எடுத்துள்ளன என்பது திமுகவின் தேனிலவு காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. அரசு ஊழியர்கள் நிலை எப்போது தெரியும்?

அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி, பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு கொடுக்காது என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. தேர்தலுக்கு முன்பாக திமுக சார்பில் அமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பல்வேறு துறைகளை ஆய்வுக்கு உட்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்தது. டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் ஒன்று கூடி, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தலாம் என்று தீர்மானித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரைத்தனர். முந்தைய அதிமுக ஆட்சியின் பொருளாதார தோல்விகளால் தமிழ்நாடு படுகுழிக்கு போய்விட்டது என்று மேடை மேடையாக விமர்சித்த ஸ்டாலின், பொருளாதார சீரழிவுக்கு மத்தியிலும் அரசு ஊழியர்களுக்கு பழைய படி ஓய்வூதியம் கிடைக்கும் என்று உறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் எவ்வளவு செலவு பிடிக்கும் என்று கணக்கு போட்டு பார்த்து, நிதி நிலை ஒத்துழைக்கவில்லை என முடிவெடுத்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனைக் கொண்டு, பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்த வாய்ப்பில்லை எனக் கூற வைத்துவிட்டார். ஏன், தமிழ்நாட்டின் நிதி நிலை, அதன் எதிர்காலம் எப்படி இருக்கும்? அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கும் என்பதை ஆராயாமல் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவதாக எப்படி வாக்குறுதி அளித்தார்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பணவீக்கம் குறைந்தும் பொருளாதார சுமையா?:

செல்வியம்பாளையத்தில் திமுகவின் சாதனைகளை விளக்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு 6 லட்சம் கோடி கடனில் தத்தளித்துக்கொண்டு இருந்தது. ஆனால், தமிழ்நாடு வீழ்ச்சியில் இருந்து மீண்டு தலை நிமிர்ந்து நிற்கிறது. துவண்டு கிடந்த மாநிலம் துள்ளி விளையாடுகிறது. முடங்கிக் கிடந்த பணிகள் புத்துணர்வு பெற்றுள்ளது. நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வந்துள்ளோம். தரையில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாடு இன்று உயிர்த்து நிற்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மிகுந்த நம்பிக்கையோடு செயல்பட்டு இந்தியாவின் சிறந்த மாநிலம் மட்டுமின்றி அனைத்து வளங்களும் நிறைந்த மாநிலமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஐந்து ஆண்டுகள் கடந்தும் ஆட்சி நீடிக்கும் போது இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமல்லாமல் உலகின் சிறந்த மாநிலமாகவும் தமிழ்நாடு உருவெடுக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பணவீக்கம் குறைந்துள்ளது. இதை நான் சொல்லவில்லை. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் சொல்கின்றன என்று ஸ்டாலின் பேசினார்.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதற்கும் மீண்டும் செயல்படுத்த முடியாததற்கு காரணமாக சொல்லப்பட்டதே தமிழ்நாடு பொருளாதார சூழல் தான். ஆனால், தற்போது தான் கடந்த ஓராண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மீட்டுவிட்டாரே ஏன் திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கூடாது? ஏன் தயங்குகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்? ஒருபக்கம் நிதி அமைச்சர் பிடிஆர்பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை பற்றாக்குறை என்கிறார் மற்றொரு பக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, தமிழ்நாட்டில் மட்டும் பணவீக்கம் குறைந்துள்ளது என பெருமையுடன் பேசுகிறார். தமிழ்நாட்டின் பணவீக்கம் குறையவில்லை. பொருளாதாரத்தை மீட்டுவிட்டோம் என்று கூறினால் ஏன் அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள், அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் தயங்குகிறார்?

திமுகவிற்கு தொடர் சட்டத் தோல்விகள்:

திமுகவின் தேனிலவு காலத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள மற்றொரு விஷயம் திமுக அரசு மேற்கொண்ட சட்ட போராட்டங்களுக்கு கிடைத்த தொடர் தோல்விகள். இந்து சமய அறநிலையத்துறை மூலமாக தமிழ்நாட்டில் நான்கு கலை அறிவியல் கல்லூரிகளை திறக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நீதிமன்றம் அந்த அறிவிப்புக்கு தடைவிதித்தது. அயோத்தியா மண்டபம் வழக்கிலும் கூட திமுக அரசு பின்னடைவை சந்தித்தது. அயோத்தியா மண்டப ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறினார்கள். அயோத்தியா மண்டபத்தை அரசு கையகப்படுத்தலாம் என நீதிமன்றம் முதலில் தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரம் மீண்டும் நீதிமன்றத்திற்கு சென்ற போது அதிலும் தமிழ்நாடு அரசு சரியான வாதங்களை முன்வைக்காமல் தோல்வியை சந்தித்துள்ளது.

முதியோர் இல்லங்கள் தொடங்கும் முடிவை கூட திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை நீட் விலக்கு மசோதாவில் எடுத்த முடிவை ஆளுநருக்கு அனுப்பி, அது குடியரசு தலைவருக்கு ஏன் அனுப்பி வைக்கவில்லை என்று கூறி தமிழ்நாடு அரசு எதிர்ப்பை பதிவு செய்தது. அதே போல், துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசின் கொள்கை முடிவில் ஆளுநர் தலையிட முடியாது எனக் கூறியது தமிழ்நாடு அரசு. ஆனால், முதியோர் இல்லங்கள் தொடங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எடுத்த கொள்கை முடிவை வலது சாரிகள் எதிர்க்கிறார்கள் என்பதால், முதியோர் இல்லங்கள் தொடங்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் திமுக அரசு சொல்கிறது.

பட்டினப்பிரவேசம் விவகாரத்திலும் கூட திமுக பின்னடைவை சந்தித்துள்ளது. 500 ஆண்டுகளாக நடக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது சரியா என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூட சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். பல நூறு ஆண்டுகளாக மனித கழிவை மனிதனே சுமக்கும் முறைக்கு முடிவுரை எழுதிய திமுக. பல ஐம்பது ஆண்டுகளாக மனிதனை மனிதனே வைத்து இழுக்கும் கை ரிக்‌ஷா முறையை ஒழித்த திமுக அரசு. 500 ஆண்டுகளாக மனிதனை மனிதனே சுமக்கும் பட்டினப்பிரவேசத்தில் பின்னடைவை சந்தித்ததும், அந்த முறை மனித குலத்திற்கே எதிரானது என உறுதியாக சொல்ல முடியாமல் தயங்கி நின்றபதும் ஏன் என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். இந்த விவகாரங்கள் எல்லாமே திமுகவின் ஓராண்டு கால தேனிலவு காலத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளன.

தமிழ்நாட்டு மக்களின் நிலையைக் கருத்தில் கொண்டு பழைய நடைமுறைகளை மாற்றி புதிய அரசு நிர்வாகத்தைக் கொடுப்பார்கள் என்று தான் திமுகவிடம் ஆட்சியை மக்கள் கொடுத்தார்கள். ஆனால், சில விவகாரங்களில் திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க தயங்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அதேசமயத்தில், பல கட்ட ஆய்வுகளுக்கு பிறகு தான் திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும். சொல்வதை தான் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்பது திமுகவின் பிரபலமான முழக்கம். ஆனால், தேர்தல் அறிக்கையில் கூறியபடி சில வாக்குறுதிகளை எப்படியாவது நிறைவேற்றி திமுக தனது மீது விழுந்திருக்கும் கலக்கத்தை துடைக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மின் கட்டணத்தை பொதுமக்கள கணக்கீடு செய்யலாம்!

முல்லைப் பெரியாறு: உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு புதிய பதில் மனு தாக்கல்

Arivazhagan CM

கொரோனா தொற்றுக்கு காரணம் வட மாநில மாணவர்களே – மா.சுப்பிரமணியன்

Ezhilarasan