தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு – அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சிறுநீரக நோய் குறித்த தரவுகள் அரசிடம் இல்லாததால், பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரகமும், சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையும் இணைந்து…

தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சிறுநீரக நோய் குறித்த தரவுகள் அரசிடம் இல்லாததால், பொதுசுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரகமும், சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறையும் இணைந்து ஆய்வு நடத்தியது.

பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த ஆய்வு, மாநிலம் முழுவதும் 177 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.5 ஆயிரத்து 310 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரத்த சிவப்பணுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வில், 4 ஆயிரத்து 741 பேருக்கு சிறுநீரக செயல்பாடுகள் பாதிப்படையும் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், சிறுநீரகத்தில் இருக்கும் புரதம் சிறுநீர் வழியே வெளியேறும் தன்மை 367 பேருக்கு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இந்த கணக்கெடுப்பின்மூலம், தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இதில், சிறுநீரக பிரச்னை தங்களுக்கு இருப்பதே பலருக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுநீரக பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோய் உள்ளிட்ட இணைநோய் இருப்பவர்கள் கட்டாயம் சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுநீரகம் பாதிக்கப்படுவதற்கு பழக்க வழக்கங்களும், உணவுப் பொருட்களும்தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

சோடா அதிகம் குடித்தால் சிறுநீரகத்திற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்றும்,
சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துவது சிறுநீரகத்திற்கு நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.