சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டதற்கு பின்னர், முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர்கள் யார் யார் ?
1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னை மாகாணம் தமிழ்நாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டபோது, திமுகவை தோற்றுவித்த அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பு வகித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்ணா காலமானதை அடுத்து, திமுகவின் நெடுஞ்செழியன் தற்காலிகமாக முதலமைச்சர் ஆனார்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிக நாட்கள் முதலமைச்சராக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான கருணாநிதி, முதன்முறையாக முதலமைச்சரானார். 1969ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1976ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை கருணாநிதி முதலமைச்சராக பதவி வகித்தார். இதனையடுத்து, 1977ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்றது. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த வி.ஆர்.நெடுஞ்செழியன் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இரண்டு வாரங்கள் மட்டுமே முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த அவருக்குபின்னர், முதலமைச்சரானார் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், ஜானகி ராமச்சந்திரனும் 2 வாரங்களில் பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்றதால், 1989ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டுவரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் கருணாநிதி.
1991ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதை அடுத்து, முதன்முறையாக முதலமைச்சரானார் ஜெயலலிதா. 1996 முதல் 2001 வரையிலான திமுக ஆட்சியில் மீண்டும் கருணாநிதி முதலமைச்சராக பதவி வகித்தார். தொடர்ந்து, 2001 முதல் 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார் ஜெயலலிதா. இடைப்பட்ட காலத்தில், ஜெயலலிதா சிறை செல்ல நேரிட்டதால், 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் மாதம் வரை ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சர் பொறுப்பு வகித்தார்.
2006 முதல் 2011 வரை தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அதிமுக ஆட்சியை கைப்பற்றியதால், 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா முதலமைச்சராக பதவி வகித்தார். 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் சிறை சென்றபோதும், 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின்னரும், குறுகிய காலத்திற்கு முதலமைச்சராகும் பொறுப்பு ஓ.பன்னீர்செல்வத்திற்கே கிடைத்தது. 2017ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியை 5 ஆண்டுகள் முழுவதுமாக நிறைவு செய்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து, மே மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்று ஆட்சி நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின்.












