நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றம்; கடந்து வந்த பாதை

1921ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டமன்றமாக தொடங்கி, தற்போது 100வது வருடத்தை எட்டியிருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம்.   சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

1921ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டமன்றமாக தொடங்கி, தற்போது 100வது வருடத்தை எட்டியிருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம்.

 

சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு சிறப்பிப்பதோடு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்துவைக்கிறார். இந்த நிலையில் சட்டமன்றம் குறித்த வரலாற்றை சற்று திரும்பிப்பார்ப்போம்.

மாண்டேகு- செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்தின்படி 1919ஆம் ஆண்டு இந்திய அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதன் அடிப்படையில் 1921ஆம் ஆண்டு மெட்ராஸ் சட்டமன்றம் அமைக்கப்பட்டது. சட்டமன்றத்தின் காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. மொத்தமுள்ள 132 சட்டமன்ற உறுப்பினர்களில் 34 பேரை ஆளுநர் தேர்ந்தெடுக்கலாம். முதல் பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றி சுப்பராயலு ரெட்டி தலைமையில் முதல் அமைச்சரவை பொறுப்பேற்றது.

மெட்ராஸ் சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 1921ஆம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் கூடியது. ஆளுநர் வெலிங்டனின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து மன்னர் ஜார்ஜின் சித்தப்பாவான கன்னாட் கோமகன் (டியூக் ஆப் கன்னாட்) சட்டமன்றத்தை தொடங்கிவைத்தார். அதே ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி முதல்முறையாக ஆளுநர் உரை நிகழ்த்தப்பட்டது. அதன்பிறகு 1923, 1926ஆம் ஆண்டுகளில் பொதுத் தேர்தல் நடைபெற்று முறையே 2 மற்றும் 3வது சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றது.

1935ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் மெட்ராஸ் மாகண சட்டமன்றம் லெஜிஸ்லேட்டிவ் அசம்பிளி, லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் (மேலவை) என இரண்டு அவைகளாக மாற்றியமைக்கப்பட்டது. இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, சட்டமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. எனினும், மேலவை நிரந்தர அவையாக இருந்தது. அதன் மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற்றியமைக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகான மெட்ராஸ் மாகாணத்தின் முதல் சட்டமன்றக் கூட்டம் 1952ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி நடந்தது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் இரண்டாவது சட்டமன்றத் தேர்தல் 1957ம் ஆண்டு நடந்தது. அதன் முதல் சட்டமன்றக் கூட்டம் ஏப்ரல் 1ம் தேதி நடைபெற்றது. 1962ம் ஆண்டு தேர்தல் வரை தமிழ்நாடு சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 206 ஆக இருந்தது. 1965ம் ஆண்டு மெட்ராஸ் மாகணத்தின் தொகுதிகள் எண்ணிக்கை 234 ஆக விரிவுபடுத்தப்பட்டது. 1969ஆம் ஆண்டு மெட்ராஸ் சட்டமன்றம், தமிழ்நாடு சட்டமன்றமாக மாறியது. தற்போது வரை 234 எம்.எல்.ஏ.க்களுடன் தமிழ்நாடு சட்டமன்றம் செயல்படுகிறது.

சுதந்திரத்திற்குப் பிறகு இதுவரை 11 பேர் தமிழகத்தின் முதல்வராக இருந்துள்ளனர். இதில் அதிக காலமாக 18 ஆண்டுகள் 360 நாட்கள் முதலமைச்சர் பதவி வகித்துள்ளார் மு.கருணாநிதி. குறைந்த அளவாக 23 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்துள்ளார் ஜானகி ராமச்சந்திரன். தற்காலிக முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார் நாவலர் நெடுஞ்செழியன்.

சுதந்திரத்திற்குப் பிறகு 18 சபாநாயகர்கள் பதவி வகித்துள்ளனர். 77க்குப் பிறகு வந்தவர்கள் சட்டமன்றக் காலம் நிறைவு பெறும் வரை சபாநாயகராக இருந்துள்ளனர். விதிவிலக்காக 2011ம் ஆண்டு சபாநாயகராக பொறுப்பேற்ற ஜெயக்குமார், 2012 ல் ராஜினாமா செய்தார். அதன்பிறகு துணை சபாநாயகராக இருந்த தனபால் சபாநாயகராக்கப்பட்டு, 2021 அதிமுக ஆட்சி முடியும் வரை பொறுப்பில் இருந்தார். தற்போது அப்பாவு சபாநாயகராக அவையை வழிநடத்தி வருகிறார்.

தற்போதைய சட்டமன்றம் 382 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது. 2006-11 திமுக ஆட்சிகாலத்தின் இறுதி சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்துடன் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட ஆரம்பித்தது. அதிமுக 2011ல் ஆட்சிக்கு வந்த நிலையில், மீண்டும் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலகம் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக தற்போது தற்காலிகமாக கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சென்னைக்கு வெளியே ஒருமுறை மட்டும் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. உதகமண்டலம் அரன்மொர் அரண்மனையில் 1959ஆம் ஆண்டு ஏப்ரல் 20 முதல் 30ம் தேதி வரை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.