ரத்து செய்யப்பட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடர்வதா? உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ரத்து செய்யப்பட்ட தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவான 66A…

ரத்து செய்யப்பட்ட தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவான 66A அரசியலமைப்புக்கு விரோதமானது எனக்கூறிய உச்சநீதிமன்றம், கடந்த 2015ஆம் ஆண்டு அதனை ரத்து செய்தது. ஆனாலும் இச்சட்டப் பிரிவின் கீழ் காவல்துறையினர் தொடர்ச்சியாக வழக்குப் பதிவு செய்து வருவதாகவும், நாடு முழுவதும் ஆயிரத்து 307 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பியுசிஎல் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவான 66A-வை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ரோகின்டன் நரிமன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்வது வேடிக்கையாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது மத்திய அரசுத் தரப்பில், உச்ச நீதிமன்றத்தால் தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவு 66A ரத்து செய்யப்பட்டாலும் மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதாக கூறப்பட்டது. பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுமாறும் ரத்து செய்யுமாறும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ரத்து செய்யப்பட்ட தகவல் ஒளிபரப்பு சட்டப் பிரிவு 66-Aன் கீழ் வழக்கு பதியப்படுவதை எதிர்த்த மனுக்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.