கருக்கா வினோத்தை முந்தைய வழக்குகளில் ஜாமினில் எடுத்தது யார் என்பது குறித்து திமுகவும் பாஜகவும் பரஸ்பர குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடமிருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசியதாக கருக்கா வினோத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை நேற்று காவல்துறை வெளியிட்ட நிலையில், அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தை நீர்த்துப்போகச் செய்ததாக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியிருந்தது. மேலும், நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே இது தொடர்பான விரிவான விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தது.
இதையும் படியுங்கள் : வாழ்வா சாவா ஆட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை..!
இதையடுத்து நேற்று அமைச்சர் ரகுபதி தனது X தள பக்கத்தில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாகவும், இவரை இதற்கு முன்னர் சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
தொடர்ந்து திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவும் தனது X தள பக்கத்தில், கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் ஜாமீனில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார் என்றும், பாஜகவின் திட்டம் அம்பலமானதாகவும் பதிவிட்டது.
https://twitter.com/BJP4TamilNadu/status/1717590368202682872
இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தனது X தள பக்கத்தில், “ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக வழக்கறிஞர்கள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது.
பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021 ஆம் ஆண்டே விலகிவிட்டார். அது மட்டும் அல்லாது திமுக வழக்கறிஞர்கள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமின் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுக வழக்கறிஞர்கள் ஜாமினில் எடுத்துள்ளது, இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளது.
அதேபோல் திமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார், தான் வழக்கறிஞர் என்ற முறையில் பலரை பிணையில் எடுத்துள்ளதாகவும், தற்போது தான் எந்த கட்சியிலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், முன்னதாக கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தாக கூறிய அவர், தனக்கும் வினோத்திற்கும் நேரடி தொடர்பில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.







