‘லியோ’ திரைப்படத்தின் முதல் வார வசூல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி ‘லியோ’ திரைப்படம் வெளியானது.
ரசிகர்களின் கலவையான விமர்சனங்களுடன் ‘லியோ’ திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்து வருகிறது. இத்திரைப்படத்தின் பாடல்களும் ரசிகர்ளின் பிளே-லிஸ்ட்டில் ரிபீட் மோடில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்கள் : வாழ்வா சாவா ஆட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்காவுடன் இன்று பலப்பரீட்சை..!
இந்நிலையில், லியோ படத்தின் வசூல் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘லியோ’ திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலக அளவில் ரூ.461 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றில், முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை ‘லியோ’ படைத்துள்ளது.
ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படம், ஓரிரு நாட்களில் 500 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆஃபீசை லியோ கலங்கடித்து வருவதால், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து மீம்ஸ்களை குவித்து வருகின்றனர்.







