சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் ஒரு சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




