இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 0.9 கிமீ உயரத்தில், மத்திய பிரதேசத்தின் மத்திய பகுதிகள் முதல் குமரிக்கடல் வரை விதர்பா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

29-04-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

30-04-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.