தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து இன்று அதிகாலை சாலை மார்க்கமாகப் புறப்பட்டு திருச்செந்தூர் வந்தடைந்தார். அவருக்கு தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
பட்டு வேட்டி மற்றும் சட்டையில் வந்திருந்த விஜய், மூலவர் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், ‘வெற்றி வேல்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். விஜய் வருகையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டனர். அவரைக் காண மக்கள் முண்டியடித்ததால் அப்பகுதியில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கவும் திருச்செந்தூர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.




