புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அமல்படுத்தும் வரை வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப் தனது தனியுரிமை கொள்கை மற்றும் பயனாளர் விதிமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத பயனாளர்கள் இந்த சேவையை தொடர முடியாது என்று தெரிவித்திருந்தது.
இது குறித்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் வாட்ஸ்அப் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய அரசு தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் வரை தனது தனிநபர் கொள்கைகளை ஏற்க இந்திய பயனாளர்களை வலியுறுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக வாட்ஸ்அப் தனது தனியுரிமை கொள்கைகளை ஏற்க வலியுறுத்தி தொடர்ந்து நோட்டிபிகேஷன்களை அனுப்பி வருகிறது என்றும் இது இந்திய போட்டி நிறுவனங்களின் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது என்றும் மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேலும், வாட்ஸ்அப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதனையடுத்தே தற்போது புதிய தொழில்நுட்ப விதிகளை மத்திய அரசு அமல்படுத்தும் வரை தனது புதிய தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.







