’தமிழ்நாடு அரசு எடுத்த கைது நடவடிக்கை எந்த வகையான சமூக நீதி?’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

அறவழியில் அமைதி போராட்டம் நடத்தும் அப்பாவி பழங்குடியின மக்களை அடக்குமுறையை ஏவி விட்டு இவ்வகையான அதிகார அத்துமீறலை, பலபிரயோகத்தைப் பாரதிய ஜனதா கட்சியை வன்மையாகக் கண்டிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…

அறவழியில் அமைதி போராட்டம் நடத்தும் அப்பாவி பழங்குடியின மக்களை அடக்குமுறையை ஏவி விட்டு இவ்வகையான அதிகார அத்துமீறலை, பலபிரயோகத்தைப் பாரதிய ஜனதா கட்சியை வன்மையாகக் கண்டிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் பட்டியல் இனத்தின் பழங்குடி இனத்தவரான குரும்பர் இன மக்கள் பெரும் கூட்டமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் ஆதிவாசிகளுக்கான எஸ்.டி-பிரிவில் ஜாதி சான்றிதழ் கேட்டு, கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி உள்ளனர். ஆனால், போலீசார் அடக்குமுறையில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் அடித்து விரட்டப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், குறும்பா, குறும்பர், குரும்பன்ஸ், குருமன் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இடப்பெயர்ச்சி செய்யும் இனத்தவரான இவர்களை, பழங்குடியின பட்டியல் இனத்தவராக அங்கீகரித்துச் சாதி சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குரும்பர் இனத்தவர்கள் வசித்து வருவதாக தெரிவித்துள்ள அவர், 11 ஆண்டு காலமாக இவர்கள் பட்டியலின பழங்குடி இனத்தவருக்கானச் சலுகைகளைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும், சமீபத்தில் இந்த இனத்தின் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், என்னையும், மத்திய அமைச்சர் அமைச்சரையும் அமைச்சகத்தையும் தொடர்புகொண்டு, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பரிவோடு அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து பாஜகவின் ஆதரவைத் தெரிவித்து இருந்தோம். இவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டு இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

அண்மைச் செய்தி: ‘ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனே நீக்குங்கள்’

வரும் எட்டாம் தேதி தமிழக முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்டம் வர இருக்கும் நிலையில், அங்கிருக்கும் மக்களின் குறைகளைப் பரிவோடு கேட்காமல், பலபிரயோகம் செய்து பெண்களைக் குழந்தைகளைத் தாக்கி, தமிழ்நாடு அரசு எடுத்த கைது நடவடிக்கை எந்த வகையான சமூக நீதி? அறவழியில் அமைதி போராட்டம் நடத்தும் அப்பாவி பழங்குடியின மக்களை அடக்குமுறையை ஏவி விட்டு இவ்வகையான அதிகார அத்துமீறலை, பலபிரயோகத்தைப் பாரதிய ஜனதா கட்சியை வன்மையாகக் கண்டிக்கிறது என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.