அரசியல் சாசனத்தின் மீது இடதுசாரிகளுக்கு மரியாதை இல்லை: பாஜக

நமது நாட்டின் அரசியல் சாசனம் மீது இடதுசாரிகளுக்கு மரியாதை இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் விமர்சித்துள்ளார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில்…

நமது நாட்டின் அரசியல் சாசனம் மீது இடதுசாரிகளுக்கு மரியாதை இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன் விமர்சித்துள்ளார்.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாநில அமைச்சர் சாஜி செரியன், அழகான அரசியல் சாசனத்தை நாம் கொண்டிருக்கிறோம் என அடிக்கடி கூறுகிறோம் ஆனால், பிரிட்டிஷ் முறையை கண்மூடித்தனமாக நகலெடுத்து உருவாக்கப்பட்டதுதான் நமது அரசியல் சாசனம் என விமர்சித்தார்.

இந்த அரசியல் சாசனம் சுரண்டலுக்கு எதிராக எந்த பாதுகாப்பையும் வழங்காது என்றும், சாமானிய மக்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் கொள்ளையடிக்கவே உதவக்கூடியது என்றும் அவர் விமர்சித்தார். இத்தகைய அரசியல் சாசனத்தைத்தான் நாம் கடந்த 75 ஆண்டுகளாக பெருமையுடன் பின்பற்றி வருகிறோம் என அவர் குறிப்பிட்டார்.

அவரது இந்த பேச்சு கேரள அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தை சாஜி செரியன் அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், அவர் அமைச்சராக நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.

அமைச்சரின் பேச்சு குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கோரியதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு அமைச்சர் சாஜி செரியனுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளீதரன், அமைச்சர் சஜி செரியன் அரசியல் சாசனத்தை அவமதித்துவிட்டதாகவும், இது தேச விரோதம் என்றும் குற்றம் சாட்டினார்.

அவரது பேச்சுக்கு கண்டனம் எழுந்துள்ள நிலையில் அவர் கொடுத்துள்ள விளக்கத்தைப் பார்க்கும்போது அவருக்கு அரசியல் சாசனம் குறித்து எதுவும் தெரியவில்லை என்பது புரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சாஜி செரியன் வாய் தவறி இவ்வாறு பேசிவிட்டதாக கூற முடியாது என தெரிவித்துள்ள வி. முரளீதரன், நமது நாட்டின் அரசியல் சாசனம் குறித்து இடதுசாரிகளின் கொண்டுள்ள கருத்தின் தொடர்ச்சிதான் இது என்றும் விமர்சித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.