இங்கிலாந்துடன் தோல்வி எதிரொலி – இந்தியாவை முந்திய பாகிஸ்தான்..!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையே கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி கடந்த வாரம் மீண்டும்…

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையே கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஏற்கனவே 2-1 என்று முன்னிலையில் இருந்தது. கடைசியாக இந்திய அணி, கடந்த 2007ம் ஆண்டுதான் இங்கிலாந்தின் சொந்த மண்ணில் தொடரை கைப்பற்றியிருந்தது. இதன் காரணமாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டாலும், இரண்டாவது இன்னிங்ஸில் பயங்கரமாக சொதப்பியது. இதையடுத்து சரிவில் இருந்து மீண்டு, அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்தத் தோல்வி மூலம் இந்திய அணிக்கு பல்வேறு பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியின்போது நிர்ணயிக்கப்பட்டதை விட, சற்று தாமதமாக பந்து வீசியதால் இந்திய அணி வீரர்களுக்கு போட்டியில் 40% ஊதியம் அபராதமாக விதித்து ஐ.சி.சி உத்தரவிட்டுள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இரண்டு புள்ளிகளை இந்திய அணி இழந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளப் பட்டியலில் இந்திய அணி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முக்கியமாக இந்திய அணிக்கு ஏற்பட்ட சரிவால், பாகிஸ்தான் அணி 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.