மதுரை ஆதீனம் அரசியல் பேசக்கூடாது என்று யார் சொல்வது, அவரும் வரிசையில் நின்று வாக்களிக்கிறார், அவர் அரசியல் பேசுவது என்ன தவறு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவண குடிலில் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் மா.சோ.விக்டரின் ஆவணப்படம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு ஆவணப் படத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல வரலாற்றில் இருந்து புறக்கணிக்கப்பட்ட மக்கள் தமிழ் மக்கள். ஆனால், அன்றே வரலாறில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் கண்டிப்பாக அவர்களின் வரலாற்றை அவர்களே எழுதுவார்கள் என்று சொன்னார். வரலாற்றைப் படிக்காமல் வரலாற்றைப் படைக்க முடியாது என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார். வரலாற்றில் வல்லபாய் பட்டேல் பற்றி படிப்பான். ஆனால், வ.ஊ.சி யை பற்றி படிக்க மாட்டான். கீழடியில் உள்ள தமிழர்களின் வரலாற்றை பற்றி இங்கு யாரும் பேசமாட்டார்கள். கேட்டால் அது இந்திய பண்பாடு, திராவிட நாகரிகம் என்று கூறுகிறார்கள். 20 நாளில் 18 கொலைகள் விழுந்திருக்கும் என்று தொலைக்காட்சி அனைத்தும் சொல்கிறது. உடனடியாக காவல் துறையினர் கணக்கு தப்பு 10 கொலைதான் என்று விளக்கம் தருகிறார்கள். ஒரு கொலை செய்தாலும் தப்பு தப்புதான் என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சீமான், ம.சோ.விக்டர் பற்றிய ஆவணப் படத்தை இன்று வெளிட்டோம். இந்த ஆவணப் படத்தின் மூலமாக அனைவரும் அவரது புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பற்றிய கேள்விக்கு, சட்டம் ஒழுங்கு யார் கையில் வைத்திருக்கிறார்கள். அவரிடம்தான் கேள்வி
கேட்க வேண்டும். அவரே சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும் என்று கூறுகிறார். மதுரை ஆதீனம் அரசியல் பேசக்கூடாது என்று யார் சொல்கிறது. அவரும் வரிசையில் நின்று வாக்களிக்கிறார். அவர் அரசியல் பேசுவது என்ன தப்பு. மதுரை ஆதினம் ஒரு தமிழ் தேசியவாதி.
தமிழகத்தில் அதிக அளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று தங்களை அடையாளப்படுத்த பலர் விரும்புகிறார்கள். அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும், நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்க விரும்பவில்லை. முதன்மையாக இருந்தது ஆட்சி செய்ய வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அண்ணாமலை திமுக மீது வைக்கின்ற ஊழல் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்கிறோம. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வந்த அதிமுகவின் ஊழல் பற்றி ஏன் அண்ணாமலை வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
நடிகர் விஜய் போன்ற நடிகர்கள் நடித்த படங்கள் கர்நாடகாவில் வெளியிட
விடுவதில்லை. கேஜிஎஃப் போன்ற படங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறுகிறது. ஆனால்,
நடிகர் விஜய் நடித்த படங்களை வெளியிட மறுப்பு தெரிவிக்கிறார்கள். வெளிநாட்டுப் படங்கள் அனைத்தும் இந்தியாவில் வெற்றி பெறும்போது தமிழ் படங்களை
கர்நாடகாவின் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்றார்.
-ம.பவித்ரா