டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டால் முறியடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் என்று இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.
இங்கிலாந்தில் நியூசிலாந்து அணி சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதம் பதிவு செய்தார். அது அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 26ஆவது சதம் ஆகும். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் புரிந்தார்.
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அலைஸ்டர் குக் முதல் முறையாக 10,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தவர் ஆவார். நமது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்களை பதிவு செய்து டெஸ்டில் அதிக ரன்களை பதிவு செய்த வீரர் என்ற சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில், சச்சினின் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பது மிகவும் கடினமானது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் புரிந்த சாதனை அபாரமானது. அவரது சாதனையை ஜோ ரூட் எட்டிப்பிடிக்க இன்னும் 6,000 ரன்கள் தேவை. இது அசாத்தியமானதாகும். அதாவது, அடுத்த 8 ஆண்டுகளுக்கு 1000 அல்லது 800 ரன்களாவது எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் சச்சினின் சாதனையை ஜோ ரூட்ட்டால் முறியடிக்க முடியும்.
31 வயதில் ஜோ ரூட் 10,191 ரன்களை பதிவு செய்திருக்கிறார். அவர் இதே உற்சாகத்துடன் விளையாடினால் நிச்சயமாக சச்சினின் சாதனையை முறியடிக்க முடியும். எதுவும் சாத்தியம் தான். நியூசிலாந்து லெஜண்ட் ரிச்சர்ட் ஹாட்லீ 431 டெஸ்ட் விக்கெட்டுகளையும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கோர்ட்னி வால்ஷ் 519 டெஸ்ட் விக்கெட்டுகளையும் எடுத்து சாதித்துள்ளனர். இதையே உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம் என்றார் கவாஸ்கர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000-க்கும் அதிகமான ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் இணைந்த 14வது வீரர் என்ற சாதனையை படைத்தார் ஜோ ரூட்.
-மணிகண்டன்








