உபா சட்டம் என்றால் என்ன? சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

 கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உபா சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உபா (UAPA) சட்டம் என்றால் என்ன? அந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்… இந்திய…

 கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உபா சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. உபா (UAPA) சட்டம் என்றால் என்ன? அந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? விரிவாக பார்க்கலாம்…

இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்கும் வகையில் 1967 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் தான் உபா சட்டம். அதாவது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் ((Unlawful Activities (Prevention) Act (UAPA)). இந்தியாவில் பல சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் உபா சட்டம் கடுமையான வரைமுறைகளை கொண்டு உள்ளது என்கின்றனர் சட்டவல்லுனர்கள். எழுத்தின் மூலமாகவோ, பேச்சின் மூலமாகவோ, அல்லது வேறு வழிகளிலோ இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக யார் செயல்பட்டாலும் உபா சட்டத்தின் கீழ் வழக்கை காவல்துறை பதிவு செய்து வருகிறது.

உபா(UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு சுலபமாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை. நீதிமன்ற காவல் 30 நாட்கள் வழங்கப்படுவதோடு 180 நாட்கள் குற்றப்பத்திகை தாக்கல் செய்ய அவகாசமும் காவல்துறைக்கு கிடைப்பதாக உபா சட்டப்பிரிவு 43 சொல்கிறது.

மேலும் உபா சட்டத்தின் பிரிவு 35-ன் படி எந்த ஒரு இயக்கத்தையும் தீவிரவாத இயக்கம் என்று அறிவிக்க முடியும் என்றும், அவ்வாறு அறிவித்தால், அந்த இயக்கத்தில் அதுவரை உறுப்பினர்களாக இருந்த அனைவரும், தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

அரசால் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தாலோ, அந்த இயக்கத்தின் ஆவணங்களை வீட்டில் வைத்திருந்தாலோ கூட இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. 2004, 2008, 2012, 2019 ஆம் ஆண்டுகளில் உபா சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பபிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.