பொதுவாக ஒரு கட்சியில் தோன்றும் அதிருப்தி குழு அக்கட்சியின் ஆட்சியை கலைக்க பயன்பட்டிருக்கும் அல்லது தேர்தல் நேரத்தில் ஓட்டுக்களை பிரிக்க பயன்பட்டிருக்கும். ஆனால் சிவசேனாவில் கடந்த ஜூன் மாதம் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தோன்றிய அதிருப்திக் குழு இவற்றையெல்லாம் தாண்டி ஆட்சியையே கைப்பற்றியது. பாஜகவின் உதவியுடன் கடந்த ஆண்டு ஜூன் 30ந்தேதி மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவியேற்றார் ஏக்நாத் ஷிண்டே. அவரது தலைமையில் தோன்றிய அதிருப்தி குழுதான் தற்போது உண்மையான சிவசேனாவாக ஆகியிருக்கிறது தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி. சிவசேனா என்கிற கட்சி பெயரையும் அதன் வில் அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனாவை உருவாக்கிய பால்தாக்கரேவின் மகனுக்கே அக்கட்சியில் உரிமையில்லை என்கிற அதிரடி அரசியல் திருப்பம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையை தேர்தல் ஆணையம் எந்த கோணத்தில் ஆராய்ந்து தீர்த்துவைத்தது. தேர்தல் ஆணையம் அளித்துள்ள இந்த உத்தரவு மூலம் அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாக வெளிப்படும் செய்தி என்ன? என்பதை விரிவாக பார்ப்போம்.
சிவசேனாவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை அணுகுவதில் 4 அடிப்படையான கேள்விகளை எழுப்பி அதற்கு விடை கண்டிருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் சின்னங்கள் தொடர்பான 1968ம் ஆண்டு உத்தரவின் 15வது பத்தி அடிப்படையில் இந்த பிரச்சனையை தேர்தல் ஆணையத்திற்கு முதலில் கொண்டு சென்றவர் ஏக்நாத் ஷிண்டேதான். கட்சியின் சின்னத்தையும், பெயரையும் தங்கள் தரப்பிற்கே ஒதுக்க வேண்டும் என அவர் தமது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
1. ஏக்நாத் ஷிண்டே அளித்த மனு தேர்தல் சின்னங்கள் தொடர்பான உத்தரவின் பத்தி15வது அடிப்படையில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
2. சிவசேனாவில் உண்மையிலேயே பிளவு ஏற்பட்டுள்ளதா?
3. அப்படி கட்சியில் ஏற்பட்ட பிளவு சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகும்பட்சத்தில் அந்த பிரச்சனையை தீர்க்க எந்த முறையை கையாள வேண்டும்.
4. சிவசேனாவில் எந்த பிரிவுக்கு கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஒதுக்க வேண்டும்?
இந்த 4 கேள்விகளில் 2,3,4 ஆகிய மூன்று கேள்விகளுக்கு பதில் காண்பதில் தேர்தல் ஆணையம் முக்கியமாக கருத்தில் கொண்டிருப்பது சிவசேனாவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள் என்ன, அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதைத்தான். உத்தவ் தாக்ரே மாற்று கொள்கை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார் என ஏக்நாத் ஷிண்டே கூறிய குற்றச்சாட்டுக்கள், மற்றும் அதற்கு உத்தவ் தாக்ரே அளித்த பதிலடி போன்ற கருத்து மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், அதனையெல்லாம் அதிகம் தேர்தல் ஆணையம் பொருட்படுத்தவில்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21ந்தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டிய கூட்டத்திலிருந்துதான் சிவசேனாவில் பிளவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்யத் தொடங்குகிறது தேர்தல் ஆணையம்.
அடுத்ததாக எந்த சோதனையின் அடிப்படையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது என்று வருகிறபோது, பெரும்பான்மை சோதனை என்கிற அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே தரப்பு வாதிட்டது. ஆனால் உத்தவ் தாக்ரே தரப்போ கட்சி கொள்கை மற்றும் இலக்கு சோதனையின் அடிப்படையிலேயோ அல்லது கட்சி சட்டவிதிகள் சோதனை அடிப்படையிலோ தீர்வு காண வேணடும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இந்த மூன்று விஷயங்களையும் பல்வேறு காரணிகளை கொண்டு ஆராய்ந்த தேர்தல் ஆணையம் இறுதியில் கட்சி அமைப்பிலும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்கிற சோதனையை கருத்தில் கொள்ளும் முடிவுக்குவந்தது.
கொள்கை மற்றும் இலக்கு சோதனை அடிப்படையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முயலும்போது, இருதரப்பும் தாங்கள் கட்சியின் கொள்கை மற்றும் இலக்குகளை பின்பற்றி நடப்பதாக தொடர்ந்து வாதத்தை அளித்துக்கொண்டிருப்பார்கள், ஒரு முடிவில்லாமல் சென்றுகொண்டிருக்கும் இந்த வாதத்தின் அடிப்படையில் திடமான தீர்வுகாண முடியாது எனக் கூறி தேர்தல் ஆணையம் அதனை நிராகரித்தது,
இதேபோல் சிவசேனா உட்கட்சி விவகாரத்தில் கட்சி விதி சோதனை அடிப்படையில் தீர்வு காண்பதையும் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. இதற்கு காரணமாக அக்கட்சியின் ஜனநாயக நடைமுறைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. பால்தாக்ரே கட்சியின் நிரந்தர தலைவராக, அவர் ஆயுள் உள்ளவரையோ அல்லது அவர் விரும்பும் வரையோ தொடர்வார் என்கிற விதியை மாற்றக் கூறி தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியதையும் அதன்பின் 1999ம் ஆண்டு கட்சி விதிகள் திருத்தப்பட்டதையும் ஆணையம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது 2018ம் ஆண்டு உத்தவ் தாக்ரே உட்கட்சி ஜனநாயகத்தை குலைக்கும் வகையில் தனக்கு பல்வேறு நியமன அதிகாரங்களை பெறும் வகையில் கட்சி சட்டவிதிகளில் மாற்றம் செய்துள்ளதாக ஏக்நாத் ஷிண்டே தரப்பு புகார் தெரிவித்துள்ளதையும் தேர்தல் ஆணையம் மேற்கோள்காட்டியுள்ளது. எனவே சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனைக்கு கட்சி விதி சோதனை அடிப்படையில் தீர்வு காண்பதும் சரிவராது என நிராகரித்துள்ள தேர்தல் ஆணையம் அடுத்து தேர்ந்தெடுத்ததுதான் பெரும்பான்மை சோதனை
ஒரு உட்கட்சி பிரச்சனைக்கு பெரும்பான்மை சோதனை அடிப்படையில் தீர்வு காண்பதே சரியாக இருக்கும் என்பதற்கு காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளில் பிளவு ஏற்பட்டபோது அதனை தீர்ப்பதற்கு பெரும்பான்மை சோதனையை கையில் எடுத்ததை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் பெரும்பான்மை அடிப்படையில் உட்கட்சி பிரச்சனைகளில் தீர்வு காண்பதில் உள்ள முக்கியத்துவத்தை சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதையும் தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மை சோதனை என்று வருகின்றபோது, கட்சி அமைப்பிலும், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் அமைப்பிலும் யாருக்கு பெரும்பான்மை என்பதை தீர்மானிக்க வேண்டும். சிவசேனா விவகாரத்தில் கட்சியின் கட்டமைப்பிலும் அதில் அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் உரிய ஜனநாயக முறைகள் பின்பற்றபடவில்லை என்கிற புகாரை சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம் கட்சி அமைப்பில் யாருக்கு பெரும்பான்மை என்கிற அளவுகோலை நிராகரித்துள்ளது. இறுதியில் சிவசேனா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு என்கிற கணக்கை எடுத்து அந்த அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டே பிரிவிற்கு கட்சிபெயரையும், வில் அம்பு சின்னத்தையும் வழங்கியுள்ளது. இந்த முறையே சரியானது என்பதற்கு சில காரணங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதாவது ஒரு கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீரிக்கப்படுவதற்கும் அந்த அங்கீகாரம் தொடர்வதற்கும் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத்தில் அக்கட்சி பெறும் வாக்குகளே முக்கிய பங்குவகிக்கின்றன. அக்கட்சியின் வேட்பாளர்கள் கட்சி பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தியே தேர்தல் களத்தில் நிற்கிறார்கள். எனவே தேர்தல் சின்னங்கள் தொடர்பான 1968ம் ஆண்டு உத்தரவின் பத்தி 15 அடிப்படையில் பிரச்சனை எழுப்படும்போது கட்சி சின்னம் எந்த பிரிவுக்கு என்பதை தீர்மானிப்பதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு யாருக்கு என்பதை கருத்தில்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் விளக்கம் அளித்துள்ளது. மேலும் கட்சி அடிப்படை உறுப்பினர்களாக உள்ளவர்களும் தேர்தலின்போது வாக்களிப்பதால் அவர்களின் கருத்தும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது என்பதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடாளுமன்ற, சட்டமன்ற பெமபான்மை
மேற்சொன்ன பெரும்பான்மை அடிப்படையில் பார்க்கும்போது, மகாராஷ்டிரா சட்டப்பேரவை சிவசேனா உறுப்பினர்கள் 55 பேரில் 40 பேர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதரவாக பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அம்மாநில சட்டமேலவை உறுப்பினர்கள் 12 பேரில் அனைவரும் உத்தவ் தாக்கரேவிற்கு ஆதரவாகவே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். எனினும் இரண்டு அவைகளையும் சேர்த்து மொத்தமாக பார்க்கும்போது 67 பேரில் 40 பேரின் ஆதரவு ஏக்நாத் ஷிண்டேவிற்கே கிடைத்துள்ளது. இதே போல் நாடாளுமன்றத்தில் சிவசேனா மக்களவை உறுப்பினர்கள் 19 பேரில் 13 பேர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஆதரவாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூன்று பேரும் உத்தவ் தாக்ரேவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும் இரு அவைகளின் மொத்த உறுப்பினர்களின் மொத்த உறுப்பினர்கள் 22 பேரில் 13 பேரின் ஆதரவு ஏக்நாத் ஷிண்டேவிற்கு கிடைத்துள்ளது என்பதால் இந்த பெரும்பான்மை சோதனையிலும் அவரே வெற்றி பெற்றுள்ளார்.
எம்.பி., எம்.எல்.ஏக்கள் பெற்ற வாக்குகள்
இரு தரப்பு எம்.எல்.ஏக்கள், மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தேர்தலில் பெற்ற வாக்குகளையும் பெரும்பான்மையை தீர்மானிக்க தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில், கடந்த 2019ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 55 சிவசேனா எம்.எல்.ஏக்கள் பெற்ற மொத்த வாக்கான 47,82,440 வாக்குகளில் 76 சதவீதத்தை அதாவது 36,57,327 வாக்குகளை ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் 40 எம்.எல்.ஏக்கள் பெற்றுள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சிவசேனா சார்பில் வில் அம்பு சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் (தோற்றவர்கள் உள்பட) பெற்ற மொத்த வாக்குகள் 90,49,789 வாக்குகளில் ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்கள் 40 பேர் பெற்ற வாக்குகள் 40 சதவீதம். அதே நேரம் உத்தவ் தாக்ரேவை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் 12 சதவீதத்தையே பெற்றுள்ளனர்.
இதே போல் 2019ம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 18 சிவசேனா எம்.பிக்கள் பெற்ற மொத்த வாக்கான 1,02,45,143 வாக்குகளில் 73 சதவீதத்தை ஏக்நாத்ஷிண்டே ஆதரவு எம்.பிக்கள் 13 பேர் பெற்றிருந்தனர். அவர்கள் பெற்ற மொத்த வாக்கு 77,88,634. இந்த அடிப்படையில் உத்தவ் தாக்ரே ஆதரவு எம்.பிக்கள் 27 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளனர். 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் களத்தில் நின்ற சிவசேனா வேட்பாளர்கள் (தோற்றவர்கள் உள்பட) பெற்ற மொத்த வாக்குகள் 1,25,89,064. இதில் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் 13 எம்.பி.க்கள் பெற்ற வாக்குகள் 59 சதவீதம்.
அதே நேரம் உத்தவ் தாக்கரேவை ஆதரிக்கும் 5 எம்.பிக்கள் பெற்ற வாக்குகளின் சதவீதம் 22 சதவீதம்தான். இப்படி பல்வேறு விதங்களில் தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கை கணக்கு பெரும்பான்மை அடிப்படையில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத்ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை உண்மையான சிவசேனா என அங்கீகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. கட்சியின் வில் அம்பு சின்னத்தையும் அந்த பிரிவுக்கு ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என ஒருபுறம் ஏக்நாத் ஷிண்டே பிரிவினர் கொண்டாடிக் கொண்டிருக்க மறுபுறம் இது ஜனநாயக படுகொலை என தேர்தல் ஆணையத்திற்கு உத்தவ் தாக்கரே தரப்பு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது.
சிவசேனாவிற்கு அளிக்கப்பட்ட உத்தரவு அதிமுக விவகாரத்தில் உணர்த்துவது என்ன?
அதிமுகவில் உட்கட்சி பிரச்சனையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வரும் நிலையில், சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் என்ன தீர்ப்பை தரப்போகிறது என்பதும் அதிகம் உற்றுநோக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்காக உச்சநீதிமன்றம் அளித்த இடைக்கால ஏற்பாட்டின் அடிப்படையில் இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு தற்காலிகமாக கிடைத்திருக்கிறது. எனினும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நிரந்தர தீர்விற்காக முன்னாள் முதலமைச்சர்கள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே அதிமுகவில் உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதில் தற்போது முக்கிய பங்கு வகிக்கும்.
எனினும் நீதிமன்ற தீர்ப்புக்கு பின் இந்த விவகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கட்சி சின்னங்கள் தொடர்பான 1968ம் ஆண்டு உத்தரவின் 15வது பத்தி அடிப்படையில் கொண்டு செல்லப்பட நேர்ந்தால், அந்த விசாரணையை நீதிமன்ற உத்தரவுகள் கட்டுபடுத்தாமல் இருந்தால், அப்போது தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும் என்பதற்கு அறிகுறியாக சிலவிஷயங்களை சிவசேனா விவகாரத்தில் வழங்கப்பட்ட உத்தரவின் மூலம் உணரமுடிகிறது.
கட்சி சின்னத்திற்கு உரிமைகோரி, தேர்தல் சின்னங்கள் தொடர்பான உத்தரவின் 15வது பத்தி அடிப்படையில் தங்களிடம் இபிஎஸ் தரப்போ, ஓபிஎஸ் தரப்போ பிரச்சனையை கொண்டுவரவில்லை என்று சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்மனுவில் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் அவ்வாறு உரிமைகோரி தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் தரப்போ, இபிஎஸ் தரப்போ அணுகும்போது, கட்சிவிதி சோதனை, அல்லது பெரும்பான்மை சோதனை அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம். ஆனால் ஓபிஎஸ், மற்றும் இபிஎஸ் தரப்பு இணைந்து கடந்த 2017ம் ஆண்டு அதிமுக சட்டவிதிகளில் கொண்டுவந்த திருத்தங்கள்தான் தற்போதுவரை தேர்தல் ஆணையத்தின் பதிவுகளில் உள்ளன. எனவே இதில் முரண்பாடுகளை இருதரப்பும் எடுப்பதை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளுமா என்பது சந்தேகமே. அதே நேரம் பெரும்பான்மை சோதனை என்கிற அடிப்படையில் தீர்மானிக்கும்போது அது இபிஎஸ்க்கு சாதகமாகவே அமைய வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இந்த விவகாரம் எழுவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பெரும்பாலோனர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாகவே உள்ளனர். மேலும் 62 எம்.எல்.ஏக்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு 4 எம்.எல்.ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. மேலும் பெரும்பாலான அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களும் இபிஎஸ்க்கே ஆதரவு அளித்துள்ளனர்.
அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் ஆதரவு அவரது தந்தையான ஓபிஎஸ்க்கு இருந்தாலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள்(தோற்றவர்கள் உள்பட) பெற்ற மொத்த வாக்குகளை ஒப்பிடும்போது ரவீந்திரநாத் பெற்ற வாக்கின் சதவீதம் மிகவும் குறைவாகவே இருக்கும். அதிமுக பெயரும், சின்னமும் எந்த பிரிவுக்கு என்பதை தீர்மானிக்க பெரும்பான்மை சோதனை முறையை தேர்தல் ஆணையம் கையில் எடுத்தால், அது ஓபிஎஸ்க்கு பாதகமாகவும், இபிஎஸ்க்கு சாதகமாகவும் அமைய வாய்ப்பு இருக்கிறது. எனினும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அதிமுக உட்கட்சி விவகாரம் தேர்தல் ஆணைய விசாரணைக்கு செல்லும் சூழல் ஏற்படுமா, அப்படி செல்ல நேர்ந்தால், கட்சியின் சின்னம் யாருக்கு என்பதை தீர்மானிக்க தேர்தல் ஆணையம் எந்த முறையை கையாளும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-எஸ்.இலட்சுமணன்










