இணையதளத்தில் அதிக வருவாய் கொடுக்கும் ஒரு வணிகம் சம்பந்தப்பட்ட வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதன் மூலம் கூகுள் நிறுவனத்துக்கு விளம்பரம் மூலம் கிடைக்கும் 168 பில்லியன் டாலர் கேள்விக் குறியாகியுள்ளது.
கோன்சலஸ்.வி என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘கூகுள் உள்ளிட்ட இணையதள நிறுவனங்கள் தங்கள் வழிமுறைகள் மூலம், பயனாளர்களுக்கு பரிந்துரைக்கும் விவகாரங்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.’ என கூறியிருந்தார். பாரிஸில் கடந்த 2015ம் ஆண்டு ஐ.எஸ் இயக்கம் நடத்திய தாக்குதலில் சுமார் 130 பேர் உயிரிழந்தனர். அதில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் ‘கூகுளின் யூடியூப் நிறுவனம் தானாவே அதில் பரிந்துரைக்கப்பட்ட ஐ.எஸ் சம்பந்தப்பட்ட வீடியோக்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.’ என கூறினர்.
இணையதளங்களில் பதிவேற்றப்படும் தகவல்கள், வீடியோக்கள், படங்கள் போன்றவற்றுக்கு சட்டரீதியாக அந்த நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என்பது விவாத பொருளானது. பேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் ஆட்டோமெடிக் விளம்பரம் மூலம் மிகப்பெரிய வருவாயை பெற்று வருகின்றன. இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம் பொதுவெளியில் தன் கருத்தை சொல்ல மறுத்து விட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில், ‘இந்த வழக்கின் மூலம் விளம்பரம், பொருளாதாரம் பாதிப்பது குறித்து கவலையளிக்கிறது. தகவல் தொழில்நுட்பம் சட்டம் (பிரிவு 230) கீழ், மூன்றாம் நபரின் விளம்பரம் உள்ளிட்டவற்றில் இருந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொறுப்பாகாது. இவையெல்லாம் மனிதத் தொடர்புகள் இல்லாமல், இணையம் மூலமாக தானாகவே பரிந்துரைக்கப்படும் விளம்பரங்கள்.’ என்று கூறியுள்ளன.
இணையதளத்தில் வரும் விளம்பரங்களில் 50% கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு செல்கின்றன .இதுபோன்ற விளம்பரங்கள் மூலம் 2022ம் ஆண்டு கூகுள் நிறுவனம் 168$ பில்லியன் டாலரும், மெட்டா (பேஸ்புக்) 112$ பில்லியன் டாலரும் வருவாயாக பெற்றுள்ளன. இந்த வழக்கின் மூலம் அந்த வருவாய் கேள்விக்குறியாகியுள்ளது.
-ம.பவித்ரா








