ரவுடிகளை தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு வாக்கு கேட்டு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 3-வது நாளாக நேற்று பிரசாரம் செய்தார். கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் முதல் சூரம்பட்டி நால்ரோடு வரை பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் எந்த திட்டமும் செய்யவில்லை என்று பச்சை பொய் கூறுகிறார். 21 மாத ஆட்சியில் திமுக ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு பணிகூட செய்யவில்லை. ஈரோட்டுக்கு எந்த பணியை செய்து இருக்கிறீர்கள் என்று இப்போது வீதி வீதியாக வாக்கு கேட்டு வரும் அமைச்சர்களிடம் கேளுங்கள்.
நாங்கள் மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை நிறைவேற்றி நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்டு வருகிறோம். ஆனால் 21 மாதங்கள் பல்வேறு துறைகளிலும் கொள்ளையடித்த பணத்தை கொண்டு மக்களை ஏமாற்றி ஆசைவார்த்தை கூறி வாக்கு பெறலாம் என்று எண்ணிக் கொண்டு அமைச்சர்கள் வருகிறார்கள்.
அமைச்சர்கள் வீதிவீதியாக வந்து வாக்காளர்களுக்கு ரூ.1000, ரூ.2000 என்று கொடுக்கிறார்கள். தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக சென்னை, டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகங்களுக்கு புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் கோர்ட்டில் இதுபற்றி வழக்கு தொடர்ந்து இருக்கிறாம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதியின் நினைவாக கடலில் ரூ.81 கோடியில் எழுதாத போன சிலை வைக்கப்போகிறார்களாம். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும் சிலை வைத்தே தீருவேன் என்று கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் 520 வாக்குறுதிகள் கொடுத்தார். 200 பக்கம் கொண்ட அந்த புத்தகத்தில் அவர் கூறிய எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை.
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கினார்களா? கியாஸ் மானியம் ரூ.100 தருவேன் என்றார். கொடுத்தாரா? இப்போது 21 மாதங்கள் ஆகிவிட்டது. 21 மாதங்களுக்கு உரிமை தொகை ரூ.21ஆயிரம், கியாஸ் மானியம் ரூ.2,100 என மொத்தம் ரூ.23 ஆயிரத்து 100 கொடுத்துவிட்டு வாக்கு கேட்டு வாங்க என்று அமைச்சர்களிடம் கேளுங்கள்.
எல்லா வாக்குறுதிகளையும் கொடுத்து ஏமாற்றியவர்கள் திமுகவினர். தை பொங்கலுக்கு முதலில் ரூ.1000 பொங்கல் தொகுப்பு, பின்னர் ரூ.2500 பொங்கல் தொகுப்பு, முழு கரும்பு அதிமுக ஆட்சியில் வழங்கினோம். திமுக ஆட்சியில் ரூ.1000 தருவதற்கு எத்தனை போராட்டங்கள். ஒரு முழு கரும்பு பெறுவதற்கே போராட்டம் நடத்த வேண்டியது இருந்தது. பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி ஊழல் செய்த ஒரே அரசு திமுக அரசு.
நான் முதலமைச்சராக இருந்த போது 110 விதியின் கீழ் 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை வழங்க உத்தரவிட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கினேன். ஆனால் 21மாத திமுக ஆட்சியில் 7 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது. 10 ஆண்டுகளில் 53 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுத்தோம். அதை திமுக அரசு நிறுத்திவிட்டது. அம்மா 2 சக்கர வாகனம் வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் என்று அதிமுக திட்டங்களை நிறுத்திவிட்டனர்.
மின்கட்டணத்தை 54 சதவீதம் உயர்த்திவிட்டனர். இன்னும் 4 ஆண்டுகளில் 24 சதவீதம் உயரும். வீட்டு வரி, கடை வரி என அனைத்தும் உயர்ந்துவிட்டது. இப்படி படித்தவர்கள், பாமரர்கள் என்று அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக. ரவுடிகளை தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
இஸ்லாமியர்களுக்கு திமுக தான் பாதுகாவலர்கள் என்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். தேர்தல் வந்தால் தான் சிறுபான்மையினர் திமுகவினர் கண்ணுக்கு தெரிவார்கள். அதிமுக ஆட்சியில் தான் சிறுபான்மையினர் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். இஸ்லாமியர்களை கெளரவபடுத்தி, அவர்களுக்கு தேவையான உதவிளை செய்வது அதிமுக தான் என்று கூறினார்.







