தமிழகத்தில் பணியில் இருக்கும் காவலர்களுக்கு உணவு வழங்கும் முறை என்ன ?

உத்தரபிரதேச மாநிலத்தில் காவலர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என அம்மாநில காவலர் ஒருவர் கண்ணீருடன் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இந்தநிலையில் நம் மாநிலத்தில் காவல்துறையில் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும்…

உத்தரபிரதேச மாநிலத்தில் காவலர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது என அம்மாநில காவலர் ஒருவர் கண்ணீருடன் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இந்தநிலையில் நம் மாநிலத்தில் காவல்துறையில் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப்படி எவ்வளவு? யாருக்கெல்லாம் கிடைக்கிறது என்பதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஒரு மாநிலத்தை பாதுகாக்கும் பணியை திறம்பட மேற்கொண்டு வருவது காவல்துறை ஆகும். அப்படியிருக்க நம் நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசத்தில் காவலர்கள் நிலை கேள்வி குறியாக உள்ளது. அங்கு காவலர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லாமல் இருப்பதாக கூறி உத்தரபிரதேச மாநில பிரோசாபாத் காவலர் மனோஜ் குமார் என்பவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்தியாவிலேயே தலைசிறந்த காவல்துறை என பெயரெடுத்துள்ள தமிழக காவல்துறையில்  ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 101 காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை பணியாற்றி வருகின்றனர்.

தமிழக காவல்துறையில் வடக்கு,தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு என 4 மண்டலங்களாகவும், 9 காவல் ஆணையரகங்களாகவும் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 38 காவல் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. காவல் ஆணையரகங்கள் காவல் ஆணையர் தலைமையிலும், மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஒன்பது மாநகர காவல் ஆணையரகங்களில் பணியாற்றும் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து, ஆயுதப்படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் காவலர்களுக்கு தினமும் ரூ. 300 வீதம் தினமும் உணவுப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், தினமும் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு, ஊர்வலங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபட வேண்டி இருப்பதால் உணவுப்படி தினமும் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் மாநகர காவல்துறை போல் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை பணியாற்றுபவர்களுக்கு தினமும் உணவு வழங்கப்படுவதில்லை. போராட்டங்கள், முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல், ஊர்வலங்கள் போன்ற பணிகளில் ஈடுபடும்போது மட்டுமே ரூ. 250 வீதம் உணவுப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறை ஆய்வாளர் முதல் காவலர் வரை உள்ளவர்கள் மாவட்டஎஸ்.பி அலுவலகம்,  நீதிமன்றங்கள், சம்மன் கொடுக்க செல்லுதல் உள்ளிட்ட இடங்களுக்கு அலுவலகப்பணியாக அடிக்க சென்று வர வேண்டி இருப்பதால் பயணப்படி மாநகர காவல்துறையினரை விட கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறை பொருத்தவரை பணிக்கு வந்தால் மட்டுமே இந்த உணவுப்படி வழங்கப்படும். மாதத்தில் மொத்தமாக கணக்கெடுத்தே உணவுப்படி வழங்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிவ.செல்லையா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.