அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை மர்ம நபர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ எனும் சாத்தானின் வேதங்கள் நாவல் காரணமாக அவரது உயிருக்கு பல அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி பங்கேற்றார்.
சல்மான் ருஷ்டி மேடையில் விரிவுரை அளிக்க இருந்த போது, திடீரென மர்ம நபர் ஒருவர் அவரின் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதனால் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். படுகாயமுற்ற அவரை மருத்துவ ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனிடையே இத்தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர், நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஹடி மடர் என்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே சல்மான் ருஷ்டிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







