உங்களோடு பேசுவதில் பெருமை கொள்கிறேன்: பிரதமர் மோடி

உங்களோடு பேசுவதில் பெருமை கொள்கிறேன் என, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கணைகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த்…

உங்களோடு பேசுவதில் பெருமை கொள்கிறேன் என, காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர் – வீராங்கணைகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் பதக்கப்பட்டியலில் இந்தியா 4வது இடம் பிடித்தது. 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை குவித்து இந்திய வீரர் – வீராங்கணைகள் நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.

அவர்களை தனது இல்லத்திற்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, உங்கள் பணிகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் குறிப்பிட்டார். உங்களோடு பேசுவதை ஒவ்வொரு இந்தியரும் எவ்வாறு பெருமிதத்துடன் உணருவார்களோ அவ்வாறே தாமும் உணருவதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாம் எல்லோரும் ஒரே குடும்பம் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

நாடு தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில் நீங்கள் உங்கள் கடின உழைப்பின் மூலம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறீர்கள் என குறிப்பிட்ட பிரதமர், காமன்வெல்த் போட்டி மற்றும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி என இரண்டு சர்வதேச போட்டிகளிலும் நமது வீரர்கள் மிகப் பெரிய சாதனைகளை நிழ்த்தி இருக்கிறார்கள் என்றார்.

கடந்த கால போட்டியோடு ஒப்பிடும்போது இம்முறை புதிதாக 4 விளையாட்டுக்களில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இது இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் நிஷித் ப்ரமானிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

  • பால. மோகன்தாஸ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.