தமிழ்நாடு அரசின் 2022 – 23-ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ள திராவிட மாடல் குறித்து விளக்கங்களைக் கீழே காணலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முழுமையான முதல் பட்ஜெட், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பட்ஜெட் உரையின் தொடக்கத்தில், திராவிட மாடலின் இலக்கணமாகத் திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற வார்த்தைகளுடன் தொடங்கினார். இந்த பட்ஜெட்டானது திராவிட மாடலின் அடிப்படையில் அமைந்த பட்ஜெட் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே, திராவிட மாடல் என்ற இந்த வார்த்தை தொடர்ந்து உச்சரிக்கப்பட்டு வருகிறது. பேராசிரியர் ரகுராம் ராஜன் தலைமையில் 5 ஆளுமைகளைக் கொண்ட பொருளாதார ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சிக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்குவதே இந்த குழுவின் நோக்கம் என அறிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரால் தொடர்ந்து உச்சரிக்கப்படும் திராவிட மாடல் என்றால் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியே திராவிட மாடல். பாலின பேதமற்ற, ரத்த பேதமற்ற “எல்லாருக்கும் எல்லாம்” என்பதே திராவிட மாடலின் அடிநாதம். இத்தகைய திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதே தனது பணி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில் சமூக மேம்பாட்டில் இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும் எனவும் கூறியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கொள்கையை பிரதிபலிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட், தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உதவும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.