முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

இதனால்தான் சாலைகளில் மழைநீர் தேங்குகிறது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான வடிகால் அமைப்பு இல்லாததே மழைநீர் தேங்கக் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார். இந்நிலையில், சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழுவினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 18 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்றனர். அப்போது மழை நீர் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்காமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவினர், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எ.வ. வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மாதம் சென்னையில் பெய்த மழைதான் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை எனவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க, அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முன்கள பணியாளர்களுடன் இணைந்து தானும் களத்தில் இருந்ததாகவும், இனியும் தொடர்ந்து இருப்பேன் எனவும் உறுதியளித்தார்.
இதனையடுத்து தொடர்ச்சியாக வந்த பேரிடரை வெல்லும் அரசாகத் தமிழ்நாடு அரசு உள்ளதாகவும், நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். பின்பு சென்னையின் அனைத்து பகுதிகளிலும் ஒரே மாதிரியான வடிகால் அமைப்பு இல்லாததே, தண்ணீர் தேங்கக் காரணம் எனவும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினால்தான் சென்னையில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதாகவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நீர் மேலாண்மைக்கான சிறந்த திட்டம் குறித்த அறிக்கையை, 18 பேர் கொண்ட குழுவினர் அளிக்க வேண்டும் எனவும், சென்னை புறநகர்ப் பகுதியில் செயல்படுத்த வேண்டிய விரிவான திட்டங்களைத் தயார் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டார். வெள்ளம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டதாகவும், வெள்ள பாதிப்புகளைக் குறைக்க, கனமழைக்கு முன்பே திட்டமிட்டு, அரசு கவனம் செலுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார்.
Advertisement:
SHARE

Related posts

ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

Saravana

கொரோனாவை இந்தியா தைரியத்துடன் எதிர்கொண்டது: நிர்மலா சீதாராமன்

Halley Karthik

சாதி மறுப்பு திருமணம்; பெண்ணை தூக்கிச் சென்ற பெற்றோர்

Saravana Kumar