எடப்பாடி அணியிடம் ஓபிஎஸ் அணியினர் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதே அதிமுக முக்கிய நிர்வாகிகளின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தாலும், ஆதிக்கம் செலுத்தும் இடத்தில் ஈபிஎஸ் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தனது நிலையை தக்க வைத்துக்கொள்ள ஓபிஎஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக தெரிகிறது. அதுகுறித்து விவரிக்கிறார் இராமானுஜம்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை நோக்கி நகர எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். இதற்காக அவர் தொண்டர்களிடம் ஆதரவு திரட்ட கிராமம் கிராமமாக செல்ல திட்டமிட்டுள்ளார். அதேநேரத்தில் அதிமுகவில் உள்ள மற்ற நிர்வாகிகளின் ஆதரவை தன் பக்கம் திருப்ப ஓபிஎஸ் புதிய ஆயுதம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். அதாவது அதிமுகவில் வழிகாட்டுதல் குழுவில் 10 பேர் தம்முடைய ஆதரவாளராகவும், மற்றொரு 10 பேரை எடப்பாடி பழனிசாமி நியமித்து கொள்ளலாம் என்ற யோசனை அவர் முன்வைத்துள்ளதாக தெரிகிறது. அதிமுகவின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் எனத்தெரிகிறது. இந்த சொத்துக்களை பாதுகாக்க எம்ஜிஆர் காலத்தில் இருந்தே 5 பேர் மட்டுமே பாதுகாப்பு குழுவில் உள்ளனர். ஆனால் பல அறக்கட்டளைகள் அதிமுகவில் உருவாக்கப்பட்டு, அவை அதிமுகவினரால் சரி வர பராமரிக்கபடாததால் அவைகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவற்றை சீர்படுத்த குழு ஒன்று உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓபிஎஸ் தரப்பில் இருந்து முன் வைக்கப்படுவதாக தெரிகிறது. இதுகுறித்த பேசிய அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர், எம்ஜிஆர் காலத்தில் கட்சி தொடங்குவதற்கு முன்னர் தற்போதைய அதிமுகவின் தலைமை கழகமானது சத்யா திருமண மண்டபமாக இருந்தது. அதற்கு முன்னர் சிறிது காலம் தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் பயன்படுத்தி வந்தனர். பின்னர் அதிமுக தொடங்கிய பின்னர் எம்ஜிஆர் அக்கட்டிடத்தை தலைமை கழகமாக மாற்றினார். எம்ஜிஆர் தனது மறைவிற்கு பின்னர் கட்சி பிளவுபடாமல் இருந்தால், அதனை தலைமை கழகமாக நிர்வாகிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் என உயில் எழுதியிருந்தார். ஜானகி – ஜெயலலிதா என இரு அணிகளாக பிரிந்தபோது அந்த கட்டிடம் ஆர்டிஓவால் சீல் வைக்கப்பட்டது. பின்னர் இரு அணிகளும் இணைந்த பின்னர் அதிமுகவின் வசம் அக்கட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதா தனது காலத்தில், கடந்த 1997ஆம் ஆண்டு அக்கட்டிடத்தின் அருகில் இருந்த சில நிலங்களை விலைக்கு வாங்கி அதனை விரிவுப்படுத்தினார். அப்போது அதிமுகவால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் சசிகலாவும் ஒரு நிர்வாகி எனக் கூறப்படுவது உண்டு.
அதேபோல் நெல்சன் மண்டேலா சாலையில் உள்ள அண்ணா அறக்கட்டளை சொத்துக்களும் அதிமுகவிற்கு சொந்தமானது. இப்போது அவை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதே நிர்வாகிகள் பலருக்கும் தெரியவில்லை. அண்ணா சாலையில் அமைந்துள்ள சபையர் திரையரங்க இடமும் அதிமுகவின் சொத்துதான் என கூறப்படுகிறது. இது தற்போது சசிகலாவின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. இதுபோல் அண்ணா திமுகவிற்கு என பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. இவற்றில் பலவற்றின் வங்கி கணக்குகள் இன்று முடங்கி போயுள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டுமென்றால், பல்வேறு புதிய கமிட்டிகள் உருவாக்கப்பட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் விரும்புகின்றனர். இதில் 50 சதவீத இடங்களை ஓபிஎஸ் அணியும், மீதமுள்ள 50 சதவீத இடங்களை எடப்பாடி அணியினரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை ஓபிஎஸ் முன் வைக்கிறார். அதேபோல், ராஜ்ய சபா போன்ற பதவிகளில் இரு அணியை சார்ந்தவர்களுக்கும் சம பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓ பன்னீர் செல்வத்தால் முன் வைக்கப்படுகிறது.
ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள எடப்பாடி தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. அவரைப் பொறுத்தவரை ஒற்றைத் தலைமையை விரும்புவதாக தெரிகிறது. எடப்பாடியின் இருந்த விருப்பத்திற்கு முட்டுக்கட்டை போடவே தனக்கு பதவி எனக் கேட்பதைவிட தமது ஆதரவாளர்களுக்கு புதிய பதவிகள் வேண்டும் என்ற கோஷத்தை ஓபிஎஸ் முன் வைத்துள்ளதாக அந்த நிர்வாகி கூறுகிறார்.அதிமுகவில் நடக்கும் அனைத்து நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் சசிகலா, ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை வலுப்பெற்றால், அதனை ஓபிஎஸை வைத்து முறியடிக்க வேண்டும் என நினைக்கிறாராம். இதனையெல்லாம் மனதில் வைத்துதான் விரைவில் எனது அரசியல் பயணம் தொடங்கும் என ஆன்மீக பயணம் மேற்கொண்டு வரும்போது செய்தியாளர்களிடம் சசிகலா கூறியதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, தன்னுடைய ஒற்றைத்தலைமை முடிவை கைவிட்டுவிட்டால், எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே இந்த முடிவில் ஆணித்தரமாக இருப்பது என அவர் முடிவெடுத்துள்ளதாக ஈபிஎஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இராமானுஜம்.கி