நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே: சசிகலா

நடந்தது பொதுக்குழுக் கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே என்று சசிகலா தெரிவித்தார். அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்தது. இந்த விழாவில் சசிகலா பேசியதாவது: எம்.ஜி.ஆர் அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில்…

நடந்தது பொதுக்குழுக் கூட்டம் அல்ல; வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே என்று சசிகலா தெரிவித்தார்.

அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைந்தது. இந்த விழாவில் சசிகலா பேசியதாவது:

எம்.ஜி.ஆர் அனைவரையும் சரிசமமாகப் பார்ப்பார். வாழ்க்கையில் மிகப் பெரிய பொறுப்பு எனக்கு இருந்தது. எனவே அனைவரையும் ஒன்றுபடுத்தி இயக்கத்தை வழிநடத்தினேன். நம் அனைவரின் எண்ணமும் மீண்டும் கழக ஆட்சியை அரியணையில் ஏற்றுவது மட்டும்தான்.

அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் மிக பெரிய கட்சி நம் கட்சியாக அதிமுகவைக் கொண்டு வர வேண்டும். இன்று அண்ணா திராவிடர் கழகம் இணைந்துள்ளது. இதேபோல் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒருங்கிணைந்த அண்ணா திராவிடர் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கும் வரை நான் ஓயமாட்டேன். இதுவே நாம் இருபெரும் தலைவருக்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும்.

ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசியதை எண்ணிப் பார்க்கிறேன். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட உண்மையான இயக்கம் அதிமுக. இந்த இயக்கம் இருக்கின்ற வரை தமிழர் வாழ்வு வளரச் செயல்படும். எனக்கு பின்னர் பல நூற்றாண்டுகள் மக்களுக்காக அதிமுக இயங்கும்.

அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக நின்றால் இயக்கம் பல நூற்றாண்டுகள் இயங்கும். அதிமுகவை தமிழக மக்கள் எப்படி பார்த்தார்கள். நம் இயக்கத்தில் நடந்த நிகழ்வு மிகவும் மனதிற்கு கவலை அளிக்கிறது.

நம் தலைவர்கள் எப்படி கஷ்டப்பட்டார்கள் ? இந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கம்? என்பதெல்லாம் மறந்துவிட்டு ஒரு சிலருடைய உண்மையான பொறுப்பு தனிப்பட்ட தேவைகளுக்கு நீ பெரியவன் நான் பெரியவன் என்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவதால் தற்போது அப்பாவி தொண்டர்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.

அதிமுக வரலாற்றில் ஆண்டுக்கு ஒரு முறை கழக சட்டத் திட்டங்களை யாரும் மாற்றியதில்லை. இது மிகப்பெரிய கேளிக்கூத்தாக உள்ளது. சட்டப்படி இவர்கள் செய்வது செல்லாது. இதையெல்லாம் இப்படியே நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

நடந்தது பொதுக்குழு கூட்டம் அல்ல – வெறும் நிர்வாகிகள் கூட்டம் மட்டுமே. உண்மையான தொண்டர்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள். எம்ஜிஆர் ஜெயலலிதாவின் பயிற்சிப் பட்டறையில் படித்தவளாக சொல்கிறேன். வீரத் தமிழச்சியாக சொல்கிறேன். நான் இருக்கிற வரை இந்த இயக்கத்தை யாரும் அபகரிக்கவோ, அழித்து விடவோ முடியாது.

திமுக எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது. இருபெரும் தலைவர்களின்
ஆட்சியைதான் மக்கள் எதிர்பார்க்கிண்றனர். சாதாரணத் தொண்டன் உருவாக்கிய இயக்கத்தில் எம்ஜிஆர் இணைந்தார். அவருக்குப் பின்னால் ஜெயலலிதா இணைந்தார்.

மீண்டும் அம்மா மற்றும் எம்ஜிஆரின் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும். ஒற்றுமைப் பூக்களை ஒன்றாகக் கோர்ப்போம். கழகம் நஞ்சாவதை நாளையும் பார்க்க மாட்டோம் என்றார் சசிகலா.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.