தற்போது கூட்டிய பொதுக்குழுவே தவறானது என சசிகலா கூறியுள்ளார்.
சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கி சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தன்னிச்சையாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமியை தான் நீக்குவதாக அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் இதுபோன்றவற்றை செய்யமாட்டார்கள். சொந்த நலனுக்காக கூட்டப்பட்ட பொதுக்குழுவாக தான் நான் இதைப் பார்க்கிறேன். என்னுடைய வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது போன்ற கூட்டம் நடத்தியதே தவறு” என்று குறிப்பிட்டார்.
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆனதே கேள்விக்குறியாக இருக்கும்போது அவர் ஓபிஎஸ்ஸை நீக்கியது எப்படி செல்லுபடி ஆகும் என்று கேள்வி எழுப்பிய சசிகலா, “ திமுகவில் தவறான செயல் நடந்தது என்பதற்காக தான் எம்ஜிஆர் தனிக் கட்சியைத் தொடங்கினார். தன்னை நீக்கியது போன்று எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக தான் அன்று அடிமட்ட தொண்டர்களால் தான் பொதுச் செயலாளர் பதவியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று எம்ஜிஆர் விதி வகுத்துள்ளார். ஆனால், தற்போது அந்த வழியில் இவர்கள் செயல்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ் தற்போது உங்களை நாடி வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “இது காலம் பதில் சொல்ல வேண்டியது” என்று கூறினார்.