தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று? – எடப்பாடி பழனிசாமி கேள்வி?

திமுக அரசை போல் வர்ணஜாலம் பூசி தவெக அரசும் பழைய திட்டங்களை புதிய திட்டங்கள் போல் அறிவிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2026-27 நிதியாண்டிற்கான தமிழ்நாடு பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “இன்று பட்ஜெட்டில் எந்த ஒரு முக்கியமான அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஏற்கனவே இருக்கும் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று தவெக ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்கள் ஆகின்றன. இதுவரை எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. எல்லாவற்றிற்கும் ரீல்ஸ்தான் சாதனையாக பார்க்கப்படுகிறது. எந்த ஒரு புதிய திட்டங்களும் இடம்பெறவில்லை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், முதியோர் உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும் என்பதுடன் பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

யாரும் அறிவிக்காத புதிய திட்டத்தை அறிவிப்போம் என வீரவசனம் பேசினார்கள், ஆனால் புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை. தேர்தலின்போது த.வெ.க. அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று. மானிய சிலிண்டர், இலவச பேருந்து அறிவிப்பு, இளைஞர்களுக்கு வேலை போன்ற எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்பும் இல்லை. விவசாயிகளுக்கான கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்கள்.

ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. வருவாய் இல்லாமல் புதிய திட்டங்களை தவெக அரசால் எப்படி நிறைவேற்ற முடியும். திமுக அரசை போல் வர்ணஜாலம் பூசி தவெக அரசும் பழைய திட்டங்களை புதிய திட்டங்கள் போல் அறிவிக்கிறது. கடன் வாங்கித்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும், வேறு வழியில்லை. லீக்கேஜ், லீக்கேஜ் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். நிதி பற்றாக்குறையை சரி செய்ய அமைக்கப்படும் 5 நபர் குழு எப்படி கடன் வாங்குவது என யோசனை தருவார்கள் போல என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.