பாமக தலைவர் அன்புமணி வெளிடிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் கட்டுவதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 564-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சென்னையில் வரும் 29-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக சென்னை மாவட்ட மீனவர் அமைப்புகள் அறிவித்துள்ளன. மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படவுள்ள பட்டினப்பாக்கத்தின் முள்ளிக்குப்பம், முள்ளிமாநகரகம். மயிலாப்பூர் ஆகிய பகுதிகளின் மீனவர் அமைப்புகள் அண்மையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இந்த அறிவிப்பை கூட்டாக வெளியிட்டுள்ளன. சென்னை மாநகரில் உள்ள அனைத்து மீனவர் அமைப்ப்புகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும்.
புதிய தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கட்டப்படும் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே இந்தத் திட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இந்தத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள்; பட்டினப்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய அளவில் நெரிசல் ஏற்படும் என்றும் எச்சரித்திருந்த நான், புதிய தலைமைச் செயலகத்தை உள்ளடக்கிய நிர்வாக நகரத்தை சென்னைக்கு வெளியில் 1000 ஏக்கர் பரப்பளவில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதை தமிழக அரசு பொருட்படுத்தாததன் விளைவு தான் மீனவர் அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசுக்கு புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட வேண்டியது அவசியம்; ஆனால், அதை பட்டினப்பாக்கத்தில் கட்டக்கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். ஆனால், இதுகுறித்த அரசின் நிலைப்பாட்டை தமிழக அரசு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒருபுறம் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக அரசு, இன்னொரு பக்கம் இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை, மீனவ மக்களின் உணர்வுகளுக்கு எதிரான செயல்பட மாட்டோம் என்று 3 வகையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.
பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டால் மீனவ மக்கள் மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படும். கடலுக்கு மிக அருகில் தலைமைச் செயலகம் அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி மத்திய அரசும் அனுமதி அளிக்காது. இத்தகைய சூழலில் மீனவ மக்களின் உணர்வுகளை மதிப்பதாக இருந்தால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படாது; இது தொடர்பான அரசாணை எண் 564 ரத்து செய்யப்படும் என்ற ஒற்றை அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அவர்கள் வெளியிட்டால் அனைத்து சிக்கல்களும் அடங்கி விடும். ஆனால், நாளுக்கு நாள் இந்த விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பை வெளியிடாமல் தமிழக அரசு பிடிவாதம் காட்டுவது ஏன்? என்று தான் தெரியவில்லை.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் முடிவுக்கு எதிராக மீனவர் அமைப்புகளும், பிற இயக்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தினால் தேவையற்ற பதட்டமும், சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படக் கூடும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு அதன் பிடிவாதத்தை கைவிட்டு, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை எண் 564-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.




