அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அக்கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அனைவரிடமும் கடிதம் பெறப்பட்டதாக தெரிகிறது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று தலைமைக் கழக நிர்வாகிகள் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அறிக்கை ஒன்று நேற்றுமாலை வெளியானது. தலைமை நிலைய செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தாலும், அவரது பெயர் அந்த அறிக்கையில் இடம் பெறவில்லை. இந்தநிலையில் இந்த கூட்டத்தை கூட்டும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் மட்டுமே உண்டு என சூடாக ஓபிஎஸ் ஒரு அறிக்கையை நள்ளிரவில் வெளியிட்டார். இதனால் அதிமுக முகாமில் மீண்டும் உஷ்ண காற்று வீசத் தொடங்கியது.
இன்று காலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவருடைய ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், மோகன், வளர்மதி, ஆர் பி உதயகுமார், எம் ஆர் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், தம்பிதுரை ஆகியோர் நேரில் சந்தித்து இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என விவாதித்தனர். பின்னர் அனைவரும் ஆலோசனை முடிந்து அதிமுக தலைமை நிலையத்தில் நடக்க உள்ள கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
அந்த கூட்டத்தில் என்ன விதமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது என மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, கூட்டம் தொடங்கியவுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் பேசியவர்கள் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதால் அதற்கு தேவையான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு இந்த குழு முழு அதிகாரம் வழங்கியது. அதற்கு வசதியாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்த கூட்டத்தில் தேர்ந்தெடுப்பது எனவும், அதற்கு அனைவரும் கடிதம் கொடுப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
மேலும், அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள இடம் ஒன்றில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் பன்னீர் செல்வத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க அனைவரிடமும் கையொப்பம் பெறப்பட்டது.
ஓ.பி.எஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பொருளாளர் பதவியை பறிக்க வேண்டும் என சிலர் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் பார்த்து கொள்ளலாம் எனக் கூறினார் என அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இராமானுஜம்.கி









