“எங்களுக்கு என்ன பயம்? பாஜகவுக்கு தான் திமுகவை பார்த்து பயம்” – ஆ.ராசா பேட்டி

பாஜகவுக்குத் தான் திமுகவை பார்த்து பயம் என அக்கட்சியின் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார். 

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

“அமித் ஷாவை பார்த்து எங்களுக்கு என்ன பயம்? பாஜகவுக்குத் தான் திமுகவை பார்த்து பயம். பாஜகவின் மதவாதமும், பிளவுவாதமும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் 98.5 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம். நான் நிரூபிக்கிறேன். பாஜக முருகன் மாநாடு நடத்துவதற்கு அரசியல் ஆதாயம் மட்டுமே காரணம். அமித்ஷா மீண்டும் மீண்டும் தமிழ்நட்டிற்கு வருகை தர வேண்டும். அப்போதுதான் திமுகவின் இலக்கு அதிகரிக்கும்.

எப்படிபட்ட கூட்டணி அமைத்தாலும் அதனை எதிர்கொள்ள கூடிய தகுதி, ஆற்றல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உள்ளது. இந்த ஆட்சியை மக்கள் எவ்வாறு அங்கீகரிக்கிறார்கள் என பாருங்கள். 2026ல் மக்கள் பாஜகவை பார்த்துக்கொள்வார்கள். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மணிப்பூரை பார்ப்பதில்லையா? மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் குறைவான குற்றங்கள் நடைபெறுகின்றன.

எந்த ‘ஷா’ வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பதற்கு பாஜகவால் எங்களை எதுவும் செய்யமுடியாது என்று அர்த்தம். டெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா, மேற்கு வங்கம் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கூறுகிறார்கள். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இதற்கு மாற்று சித்தாந்தம், எதிர் சித்தாந்தம் அவர்களிடம் இல்லை.

இந்துதுவா மதவாத சக்திகளுக்கு மாற்று சித்தாந்தம் இல்லை. எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் எங்கள் தத்துவம். இந்த தத்துவம் அவர்களிடம் இல்லை. அதனால் பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது. இந்த தத்துவத்தை காப்பாற்றக்கூடிய தனிப்பெரும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைக்கும் உள்ளார்”

இவ்வாறு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.