மக்களவையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது ;
சாமானிய மக்களுக்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எரிபொருள் தேவைகள் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. முன்பு 27 நாடுகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 41 நாடுகளில் இருந்து எரிபொருள் கொள்முதல் செய்யப்படுகிறது. 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் எரிபொருள் பாதுகாப்புக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எரிவாயு கொள்முதல் செய்ய பல்வேறு விற்பனையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் ஏற்றி வரும் கப்பல்கள் பத்திரமாக இந்தியா வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நமது கடல் போக்குவரத்து பாதைகள் பத்திரமாக இருக்க தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளின் காரணமாக, ஹார்மோஸ் நீரிணை கடந்து பல கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. பெட்ரோல் மற்றும் டீசலில் எத்தனால் கலப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்களை மின்சாரம் மூலம் இயக்குவதால் டீசல் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது
மேற்காசிய நாடுகளின் தலைவர்கள் அனைவருடனும் நான் உரையாடினேன். பொதுமக்கள், உட்கட்டமைப்பு வசதிகள், எரிபொருள் உற்பத்தி மற்றும் மின்சார உற்பத்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை இந்தியா எதிர்த்து வருகிறது.
பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும். போரால் ஏற்படும் பாதிப்பு மனிதாபிமானத்துக்கு எதிரானது. நமது கடல் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாம் மிகவும் கவனமாக, எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் . வதந்திகளை பரப்புபவர்கள் உள்ளிட்டோரிடம் கவனமாக இருக்க வேண்டும். பதுக்கல், கள்ளச் சந்தைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இந்த பிரச்சனையை கடந்து முன்னேறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.







