சென்னை மெரினா கடற்கரையில் திருமண போட்டோ ஷூட் நடத்த வந்த போட்டோகிராபரிடம் செல்போனை பறிக்க முயன்றபோது அதை தர மறுத்ததால் மர்ம கும்பல் அவரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றது.
காயமடைந்த போட்டோகிராபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் இளமாறன் (23). திருமண நிகழ்ச்சிகளுக்கு போட்டோ ஷூட் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இன்று காலை இளமாறன் போட்டோ சூட் எடுப்பதற்காக மெரினா கடற்கரைக்கு வந்தார்.
இவரது நண்பர் தீபக் குமார் திருமண நாளை கொண்டாட தீபக்குமார் மனைவி சோனியா மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ், விஜய், பிரபா, கார்த்தி மொத்தம் 7 பேர் மெரினா கடற்கரையில் உள்ள “நம்ம சென்னை” பின்புறம் மணல் பகுதிக்கு வந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத சிலர் அங்கு வந்து மணல் பரப்பில் அமர்ந்திருந்தபோது இளமாறனிடம் எந்த ஏரியா என்றும் செல்போனை தருமாறு கோரியதாகவும் தெரிகிறது. செல்போனை தர மறுத்தபோது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மிரட்டி உள்ளனர்.
இளமாறன் கையிலிருந்த செல்போனை பறிக்க முற்பட்டபோது, தராமல் கையிலேயே அவர் வைத்திருந்ததாகவும் அப்போது கத்தியை எடுத்து இடது கையை அந்த கும்பல் வெட்டியது என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டு மெரினாவில் நடைபயிற்சி சென்றவர்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இளமாறன் அங்கிருந்து உயிர் தப்பித்து கண்ணகி சிலை எதிரே உள்ள சாலை பாரதி சாலை சென்றார்.
அங்கிருந்தவர்கள் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு இளமாறன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளர். அவரது கையில் கத்தியால் வெட்டியவர்களை மெரினா காவல் துறையினர் தேடி வருகின்றனர்.








