தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று கைத்தறி, தொழிலாளர் நலன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மற்றும் தமிழகத்தின் தொடர்ச்சியான சட்டப்போராட்டங்கள் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசினார்.
அப்போது பேசிய அவர், நீட் தேர்வின் காரணமாக மாணவி அனிதா எதிர்கொண்ட துயரத்தையும், அவரது போராட்டத்தையும் நினைவுகூர்ந்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பல்வேறு அரசுகளின் காலகட்டங்களிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானங்களும், சட்டமுன்வடிவுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதை ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டினார். மு.க. ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முதலமைச்சர் பதவிக்காலங்களிலும், இன்றைய முதல்வர் பதவிக்காலத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தமிழக சட்டமன்றத்தில் ஒருமித்த குரலில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், ஒன்றிய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். 2029-ஆம் ஆண்டு தேர்தல் சூழல்கள் மாறும்போது, நீட் தூக்கி எறியப்பட்ட நாளாக ஒரு நாள் மாறும். நாடாளுமன்றத்தில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்வதற்கான முதல் குரலாக தமிழக சட்டமன்றத்தின் குரல் ஒலிக்கும் என்றார்.
அனிதாவின் தியாகம் வீண்போகாது என்றும், அவருக்கான நீதி அரசியல் ரீதியாக நிச்சயம் வென்றெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அனிதாவின் நினைவு நாளில் அவரது போராட்டத்தையும் தியாகத்தையும் நினைவுகூர்ந்த ஆதவ் அர்ஜுனா, மாணவர்களின் கல்வி உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பாகவும், அனிதாவின் குடும்பத்தினர் சார்பாகவும் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 9-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டதாகத் தெரிவித்தார். எந்த அரசையும் சாராமல் நடத்தப்பட இருந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு முறைப்படி 15 நாட்களுக்கு முன்பாக கடிதம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் காவல்துறை இது ஆர்ப்பாட்டம் எனக் கூறி அனுமதி மறுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இன்று ஆளுங்கட்சி நீட்டை ஒழிக்க வேண்டும் என உறுதி எடுத்திருக்கிறது. இருப்பினும், அமைதியாக நடத்தப்பட இருந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி அளிக்காதது ஏன் எனக் கேட்க விரும்புகிறேன். நீட் ஒழிப்பின் அடையாளமான அனிதா நினைவேந்தலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா நடைபெறுவதால் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்றும், அதேபோல் ஊரூர் ஆல்காட் குப்பத்திலும் அம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதாகவும் தெரிவித்தார். இதனால் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வேறு இடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டால், அதை பரிசீலிப்போம் என்றார்.
இதனையடுத்து பேசிய உதயநிதி ஸ்டாலின், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கொடியேற்றத்தால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததற்காக அனுமதி மறுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். கொடியேற்றம் கடந்த வாரமே முடிந்துவிட்டது. செப்டம்பர் இரண்டாவது வாரத்தில்தான் இந்தத் திருத்தேர் விழா நடைபெறுகிறது. இன்று மக்கள் கூட்டம் அங்கு கிடையாது. இப்படிப்பட்ட சூழலில் அங்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அல்லது அவர்களிடம் முறையாகத் தெரிவித்து, மாற்று இடத்தை விரைவில் தேர்வு செய்து தர வேண்டும். ஏனென்றால், இன்று தான் அனிதாவின் நினைவு நாள் என்றார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உடனடியாக அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.




