விருதுநகர் வெடிவிபத்து – உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அனுப்பன்குளம் கிராமம் மற்றும் திருவில்லிபுத்தூர் வட்டம், விழுப்பனூர் கிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கிவந்த தனியாருக்குச் சொந்தமான வெடிபொருள்கள் தொழிற்சாலைகளில் இன்று (3.9.2026) எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்துகளில் அங்கு பணியிலிருந்த வத்திராயிருப்பு வட்டம், குன்னூர் பகுதியைச் சேர்ந்த திரு.ஈஸ்வரன் (வயது 56), த/பெ.குருவன் என்பவரும்; சிவகாசி வட்டம், சிலோன் காலனியைச் சேர்ந்த திரு.சக்திவேல் (வயது 55), த/பெ. சிதம்பரம் என்பவரும் பலத்த காயமுற்று உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், விழுப்பனூர் கிராமத்தில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள காளிராஜ் (வயது 49), த/பெ.கருப்பையா மற்றும் லேசான காயமடைந்து அம்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கருப்பாயி (வயது 47), க/பெ.ராஜேந்திரன், மகாலட்சுமி (வயது 36), க/பெ. சந்தனம், பவானி (வயது 49), க/பெ. இருளப்பன் மற்றும் இருளாயி (வயது 70), க/பெ. சக்கணன் ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்துகளில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நபர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.