“மேகதாது அணை குறித்து இரு அவையிலும் குரல் எழுப்புவோம்!” – திமுக எம்.பி., டி.ஆர்.பாலு

மேகதாது அணை விவகாரம் குறித்து இரு அவைகளிலும் திமுக எம்.பிக்கள் குரல் எழுப்புவோம் என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவாதற்காக இன்று டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய எம்.பிக்கள் கலந்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு பிறகு திமுக எம்.பிக்கள் திருச்சி சிவா மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டி.ஆர்.பாலு, “நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக தரப்பிலான கருத்துக்களை எடுத்துரைத்தோம். மாநிலங்களை பாதிக்கும் தொகுதி மறு வரையறை டிராஃப்ட் பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. தொகுதிகள் அதிகரிக்கப்படுவதாக உலகங்கள் செய்தி வெளியிடுகின்றன ஆனால் அரசு அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிவிக்கவில்லை. தொகுதி வரையறை மசோதா குறிப்பு வந்த பின்பு தான் தெளிவாக அனைத்து விஷயத்தையும் கூற முடியும். அனைத்து கட்சி கூட்டத்தில் மேகதாது அணை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாளை நாடாளுமன்றத்தில் மேகதாது அணை குறித்து பேச நாங்கள் மீண்டும் அனுமதி கோருவோம். மேகதாது அணை தொடர்பாக எங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கவில்லை என்றால் தொடர்ச்சியாக அந்த பிரச்சனை குறித்து அவையில் தொடர்ந்து எழுப்புவோம். இந்தியா கூட்டணியின் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டோம். காங்கிரஸ் ஒருங்கிணைக்கும் எந்த நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள மாட்டோம்” என்று அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, “தென் மாநிலங்களுக்கு பிரச்சனை வரக்கூடிய வகையில் தொகுதி மறு வரையறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை திமுக கடுமையாக எதிர்ப்போம். தொகுதி மறு வரையறை செய்யப்பட்டு தொகுதிகள் அதிகப்படுத்தினால் தென் மாநிலங்களில் குரல் முழுமையாக அடிப்பட்டுபோகும், குறிப்பாக குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வந்தால் தென் மாநிலங்களில் குரல் மிகவும் நசுங்கிவிடும். மக்கள் தொகை கணக்கு அடிப்படையில் தொகுதி அதிகரிக்க அனுமதிக்க மாட்டோம். மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை, ஆனால் தற்போதைய தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலேயே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்திலும் தி.மு.க உறுப்பினர்களின் இருக்கைகளை மாற்றி தர வேண்டும் என்று சபாநாயகர் இடம் கோரிக்கை வைத்திருந்தோம் அதனை ஏற்று சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.