நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இன்று டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் தம்பிதுறை எம்.பி கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “அனைத்து கட்சி கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் மேகதாது அணை தொடர்பாகவும் காவிரி பிரச்சனை குறித்தும் பேசினேன். மேகதாது அணை கட்டுவதால் கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தற்போது கர்நாடகாவில் இருக்கும் அரசு தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி வருகிறது. பெங்களூரு நகருக்கு குடிநீர் எடுப்பதற்கு நாங்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் மேகதாது அணை என்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலேயே எதிர்க்கிறோம். பெங்களூரு நகரத்திற்கு குடிநீருக்கு தண்ணீர் கிடைக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை, அதே நேரத்தில் எங்களது வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்று சொல்கின்றோம். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். கர்நாடகா அரசின் முயற்சிகளை உடனடியாக நிறுத்தும் வகையில் விவாதம் இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
“மேகதாது அணை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்!” – அதிமுக எம்.பி தம்பிதுறை
மேகதாது அணை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று அணைத்துக்கட்சிக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டதாக அதிமுக எம்.பி தம்பிதுறை தெரிவித்துள்ளார்.




