ஆறுமுகசாமி ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்த உண்மையைக் கண்டறிய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 2017ஆம் ஆண்டு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் என 150க்கும் மேற்பட்டோரையும் ஆணையம் விசாரித்தது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவும் வகையில் மருத்துவக் குழுவை அமைக்க நேற்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணைக்காக போதிய இடவசதி அளிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியது. இதனால் விசாரணை மேற்கொள்வதற்கு ஆறுமுகசாமி ஆணையம் தயாரானது.
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு ஏற்கனவே வழங்கிய ஒத்துழைப்பை போல் தற்போது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் முழு ஒத்துழைப்பை வழங்குவோம் எனத் தெரிவித்துள்ளது.








