முக்கியச் செய்திகள் ஆசிரியர் தேர்வு

மாநிலங்களவையிலும் நிறைவேறியது தேர்தல் சீர்திருத்த மசோதா

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வழிவகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக பல அம்சங்களை இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து முன்வைத்து வந்திருந்தது. ஆணையத்தின் இந்த கோரிக்கைகளை மத்திய அமைச்சரவை சமீபத்தில் பரிசீலித்ததையடுத்து நாடாளுமன்ற மக்களவையில் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

போலி வாக்காளர்களை தடுக்கும் விதமாக இந்த மசோதா நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பதை தவிர்க்க முடியும் என இந்த மசோதா குறிப்பிடுகிறது.

மட்டுமல்லாது, பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் கணவர்களுக்கு பதிலாக அவர்களது மனைவிகள் வாக்களிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் புதிதாக மற்றொரு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் மூலம், பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் மனைவிகளுக்கு பதிலாக கணவர்கள் வாக்களிக்கவும் மசோதா வழிவகை செய்கிறது.

மேலும் பல அம்சங்களை உள்ளடக்கிய இந்த மசோதாவை நேற்று மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ், திரிணாமுல், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த எதிர்ப்பையும் மீறி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதனிடையே மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர், “ஆதார் இருப்பிடத்திற்கு மட்டுமே சான்றாக இருக்க வேண்டுமே தவிர குடியுரிமைக்கு அல்ல. இந்த மசோதா மூலம், குடியுரிமை இல்லாதவர்களையும் வாக்களிக்க அரசு வழிவகை செய்கிறது.” என்று கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் மாநிலங்களவையிலும் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பையும் மீறி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான மல்லிகா அர்ஜூனா கார்கே, மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதேபோல ஆதார் அமைப்பில் பல்வேறு குறைகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இரு அவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு மசோதா சட்டமாக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனியார் உரக்கடைகளுக்கு வேளாண்துறை எச்சரிக்கை

Halley Karthik

சென்னையில் இருந்து தோஹாவுக்கு நேரடி விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு

Web Editor

தமிழ்நாட்டில் 7 இடங்களில் அகழாய்வு; முதலமைச்சர்

G SaravanaKumar