“தமிழர்களின் வாய்ப்புகளை பிற மாநிலத்தவர்க்கு தாரைவார்க்கும் சதியை முறியடிக்க வேண்டும்” – அன்புமணி!

தொழில் பழகுனர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க தெற்கு ரயில்வே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தெற்கு ரயில்​வே​யின் தமிழக எல்லைக்குபட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுனர்கள் (Apprenticeship) பயிற்சிக்காக 6,171 தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமான விதிகளை புறந்தள்ளிவிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிக்கையின் முலம் தமிழகத்தில் உள்ள தொழில் பழகுனர் பயிற்சி இடங்களை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்க தெற்கு ரயில்வே முயற்சி செய்வது கண்டிக்கத்தக்கது.

தெற்கு ரயில்​வே​யில் சென்​னை, மதுரை, திருச்சி பொன்மலை மத்​திய பணிமனை, சேலம், பெரம்​பூர் கேரஜ் மற்​றும் வேகன் ஒர்க்​ஸ், பெரம்​பூர் லோகோ ஒர்க்​ஸ், கோவை, அரக்​கோணம் பொறி​யியல் பணிமனை, கோவை போத்​தனூர் சிக்​னல் மற்​றும் தொலைத்​தொடர்பு பணிமனை ஆகிய இடங்களில் 6,171 தொழில் பழகுனர் பயிற்சி இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புவதற்கு இம்மாதம் 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிக்கையில் தான் விதிமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

22.07.2002 தேதி​யிட்ட ரயில்வே வாரிய சுற்றறிக்கை மற்​றும் 05.05.1984- தேதி​யிட்ட தொழில் பழகுனர் தேர்வு வழி​காட்டி விதி​முறை​களின்​படி பணி இடங்களில் இருந்து100 கி.மீ சுற்​றளவில் உள்ள வேலை​வாய்ப்பு அலு​வல​கத்​தில் பதிவு செய்தவர்கள் மட்​டுமே விண்​ணப்​பிக்க முடி​யும். ஆனால், இந்த விதியை மீறி வட இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் தெற்கு இரயில்வேயில் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தமிழகத்​தில் வேலை​வாய்ப்பு அலு​வல​கத்​தில் பதிவு செய்து இருப்​பவர் மட்​டுமே விண்​ணப்​பிக்க முடி​யும் என 2019-ஆம் ஆண்டில் விதி​கள் மாற்​றப்​பட்​டன.

ஆனால், இந்த விதியும் இப்போது மீறப்பட்டுள்ளது. தொழில் பழகுனர் நியமன அறிவிக்கையில், தமிழக வேலை​வாய்ப்பு அலு​வல​கங்​களில் பதிவு செய்​திருக்க வேண்​டும் என்ற பிரிவு நீக்​கப்​பட்​டுள்​ளது. அதுமட்டுமின்றி, தட்​சிண கன்​னடா பகு​தி, ஆந்​தி​ரா​வின் நெல்​லூர், சித்​தூர் பகுதி மற்​றும் கேரளா​வில் இருப்​பவர்​களும், அந்​த​மான் நிக்​கோ​பார், லட்​சத்​தீவு போன்ற பிற மாநிலங்​களில் இருப்​பவர்​களும் விண்​ணப்​பிக்​கலாம் என குறிப்​பிடப்​பட்டுள்​ளது. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய தொழில் பழகுனர் பணி பிற மாநிலத்தவருக்கு தாரைவார்க்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதை அனுமதிக்க முடியாது.

கால் நூற்றாண்டுக்கும் கூடுதலாகவே தெற்கு தொடர்வண்டித்துறையில் உள்ள பணிகளை பிற மாநிலத்தவர் பறித்துக் கொள்கின்றனர். தொழில் பழகுனர் வாய்ப்புகளும் அதே போல் பறிக்கப்பட்டு வந்த நிலையில் தான், நீண்ட போராட்டத்தின் மூலம் 2019-ஆம் ஆண்டில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமை மீட்டெடுக்கப்பட்டது. அந்த உரிமைக்கு தான் இப்போது மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

தமிழக இளைஞர்களின் தொழில் பழகுனர் வாய்ப்புகளை பறிக்கும் நோக்கம் கொண்ட அறிவிக்கையை தெற்கு ரயில்வே உடனடியாக இரத்து செய்ய வேண்டும். தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் மட்டும் தான் இந்தப் பொறுப்புக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதியை சேர்த்து புதிய ஆள்தேர்வு அறிவிக்கையை தெற்கு ரயில்வே புதிதாக வெளியிட வேண்டும். இதற்காக ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.