இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டோம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்

இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டதாகவும் இந்திய பிரதமர் மோடியோடு நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள்…

இந்தியாவுடனான போரினால் பாடம் கற்றுக் கொண்டதாகவும் இந்திய பிரதமர் மோடியோடு நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ‘அல் அரேபியா’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தை கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: இந்தியாவுடன் பாகிஸ்தான் 3 முறை போரிட்டுள்ளது. இந்த 3 போர்களின் விளைவாக பாகிஸ்தானில் வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்துள்ளது. போரின் மூலம் பாடங்களை நாங்கள் கற்றுக் கொண்டோம்.

ஆகவே இந்திய தலைமைக்கும் பிரதமர் மோடிக்கும் நான் கூற விரும்பும் செய்தி ஒன்றே ஒன்றுதான். காஷ்மீர் போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்போது தீவிரமான மற்றும் நேர்மையான பேச்சுகளை நடத்துவோம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இது மாறாதது. சண்டை போட்டுக் கொண்டு நேரத்தையும் வளத்தையும் வீணடிக்காமல் அமைதியை உருவாக்கி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் வளங்களை வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் வீணடிக்க விரும்பவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள். இரு நாட்டு ராணுவங்களிடம் பல அதி நவீன ஆயுதங்கள் உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டால் மிகப் பெரிய இழப்பு ஏற்படும். யாராலும் உயிர் பிழைக்க முடியாது. இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.