எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் – டிடிவி தினகரன் பேச்சு..!

மதுராந்தகத்தில் நடைபெற்று வரும் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தி பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி , அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ” தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மக்களாட்சியை உருவாக்க வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு கூட்டணிக்கு வந்திருக்கிறோம்.

நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழிவந்தவர்கள். எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தது உண்மைதான். ஆனால் கட்சி நலன், தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் பிரதமரின் அழைப்பை ஏற்றும் எங்கள் மனதில் இருந்த கோபத்தை விட்டுவிட்டு 2021 முடியாமல் போன ஆட்சியை உறுதியாக தமிழகத்தில் இந்தமுறை உருவாக்கிட எந்தவித தயக்கமுமின்றி குழப்பமுமின்றி அழுத்தமுமின்றி இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.

மக்கள்விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறோம்.

தமிழ்நாடு கொலை நாடாக, கொள்ளை நாடாக மாறிக் கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் புகலிடமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது. அரசு ஊழியர்கள், விவசாயிகள், மக்கள், மாணவர்கள் என அனைவரும் போராடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

மக்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினோ தனது மகன் உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார். அதை முறியடித்து மக்களாட்சியை உருவாக்க நாம் பாடுபட வேண்டும். எங்களுடைய தொண்டர்கள் அதற்காக உழைப்பார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.