செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :
“பிரதமர் மோடியால் இந்தியாவே இன்று மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தமிழகம் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. மக்களை வாட்டிவதைக்கும் அரசு தேவையா? ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? நான்கே முக்கால் ஆண்டுகளில் திமுக கொடுத்தது துன்பம், வேதனைதான்.
இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் ஸ்டாலின் செய்தது ஒன்றே ஒன்றுதான் ஊழல். முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு பிறகு முதல்வராக உதயநிதி வர வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் திமுகவிற்காக உழைத்தவர்கள் தெருவில் இருக்கிறார்கள். எந்தவொரு தகுதியும் இல்லாத உதயநிதிக்கு முதலில் எம்எல்ஏ, அமைச்சர், தொடர்ந்து துணை முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள்.
இனி எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது. தீய சக்தி திமுகவை வீழ்த்தி எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம். தேர்தல் எனும் இந்த போரில் கூட்டணி கட்சித் தலைவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டுவோம்.
இந்த தேர்தல் குடும்ப வாரிசுக்கு முற்றுப்புள்ளி வைத்து, குடும்ப ஆட்சிக்கும் ஊழல் ஆட்சிக்கும் முடிவு கட்டுகிற தேர்தல். வரும் தேர்தலில் 210 இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். அதிமுக ஆட்சியமைக்கும்” என்று பேசினார்.







