உச்சநீதிமன்றத்தின் கிளை விரைவில் சென்னையில் அமையும் என எதிர்ப்பார்க்கிறோம் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்துள்ளார்.
சார்பு நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடம் அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். இதில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், இந்திரா பானர்ஜி, ராமசுப்ரமணியன், சுந்தரேஷ், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, அமைச்சர்கள் எ.வ.வேலு, ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, உயர்நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மேம்பாட்டுக்காக ஒத்துழைக்கும் தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி கூறினார்.
எங்கள் அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்க வந்தமைக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷல் கவுல், இந்திரா பானர்ஜி, ராமசுப்ரமணியன், சுந்தரேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அவர், புதிய கட்டடம் கட்ட ஒத்துழைப்பு நல்கிய அமைச்சர்கள் எ.வ.வேலு, ரகுபதி ஆகியோருக்கும் நன்றி கூறினார்.
புதிய கட்டடம் கட்ட ரூ.500 கோடி மதிப்பிலான இடத்தை முதலமைச்சர் தந்துள்ளார். புதிய கட்டடத்தில் 160 நீதிமன்ற அறைகள் கட்டப்பட உள்ளன. பாரம்பரிய சட்டக் கல்லூரி கட்டடம், சஞ்சய் கிஷன் கவுல் முயற்சியால் உயர்நீதிமன்றத்துக்கு ஒதுக்கித்தரப்பட்டுள்ளது.
பாரம்பரியமிக்க பழைய சட்டக் கல்லூரி கட்டடம், புதுப்பிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. நம் அனைவரின் விருப்பமான உச்சநீதிமன்றத்தின் கிளை விரைவில் சென்னையும் அமையும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








