மது போதையில் தகராறு; முதியவர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

மது போதையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் 70 வயதான முத்தையன். இவர்…

மது போதையில் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் 70 வயதான முத்தையன். இவர் அதே பகுதியில் கூலித்தொழிலாளி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு குழித்துறை சந்திப்பு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக்கடையில் மது குடிக்க வந்துள்ளார். இவருடன் பிரஜித் என்ற வாலிபரும் மது குடிக்க வந்துள்ளார். இருவரும் அதிக அளவு மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மது போதையில் இருவரும் கடையில் இருந்து இறங்கி சாலை வழியாக தகராறில் ஈடுபட்டவாறு நடந்து சென்றுள்ளனர். அப்போது பளுகலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பேருந்து குழித்துறை பகுதியில் வந்த போது பிரஜித், முதியவரை பிடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி முத்தையன் அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடம் வந்த போலீசார் பொதுமக்கள் கூறிய தகவலின் படி மதுபோதையில் இருந்த பிரஜித்தை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குழித்துறை சந்திப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.