ஓபிஎஸ்-ன் தற்போதைய நிலை கண்டு வருத்தப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : ’ஓபிஎஸ்-ன் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது’ – உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இபிஎஸ் பேட்டி
இந்த தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நியாமான, தர்மமான தீர்ப்பு.
அறிவாளிகள் இருக்க வேண்டிய இடம் தான் அதிமுக என்று, புத்திகோணலாக செயல்பட்டவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரைத் தவிர, யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம். தொண்டர்கள் வந்தால் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.
ஆண்டிகள் கூடி மடம் கட்ட முடியாது. ஓபிஎஸ்-ன் தற்போதைய நிலையை கண்டு வருத்தப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். ஒரு பெரிய அறிவாளி என்று ஓபிஎஸ்-ஐ தேர்ந்தெடுத்த ஜெயலலிதா கூட, தற்போது உயிருடன் இருந்திருந்தால், இப்படி ஒரு சந்தர்ப்பவாதியை தேர்ந்தெடுத்துவிட்டோமே, அரசியலுக்கு தகுதியில்லாமல், திமுகவின் பேச்சை கேட்டு நடக்கிறாரே என்று வருத்தப்பட்டிருப்பார்” என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.








