அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு அளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய #எடப்பாடி_பழநிச்சாமி அவர்கள் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது.
அவருக்கு எமது வாழ்த்துகள்.
இவ்வாய்ப்பு மீண்டும்
பாஜக'வைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே.#ADMK pic.twitter.com/0bpB5Juw4e— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 23, 2023
- பி.ஜேம்ஸ் லிசா