உத்தரப் பிரதேசம் மைன்புரி மாவட்டத்தை சேர்ந்த சீதா என்பவர் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் ஒரு கிளையில் கணக்கு வைத்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்த சீதா வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் சீதாவின் வங்கி கணக்கில் கோடி கணக்கில் பணம் வரவு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சீதா மற்றும் அவரது மகன் அருண் குமார் ஆகியோர் வங்கிக்கு சென்றுள்ளனர். ஆனால் நேற்று வங்கி விடுமுறை என்பதால் அருகிலிருந்து ஏடிஎம்-மில் தங்களது இருப்பை (balance) சரிபார்த்துள்ளனர்.
அப்போது சீதாவின் வங்கி கணக்கில் 9,99,49,586 ரூபாய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனல் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொடர்ந்து இது தொடர்பாக அவர்கள் காணொளி ஒன்றை எடுத்துள்ளனர். அக்காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வங்கிக்கணக்கில் கிட்ட தட்ட 10 கோடி ரூபாய் இருக்கும் நிலையில், “இந்தப் பணம் எப்படி வந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறியுள்ள சீதா “இது யாருக்குச் சொந்தமானதோ, அவர்கள் அதைத் திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல அவரது கணவரும், விவசாயத்தை நம்பி வாழும் தங்கள் குடும்பத்திற்கு அந்தப் பணத்தின் மீது எந்த உரிமையும் இல்லை என்றும் வங்கிக்கு சென்று நாங்கள் சென்று பணத்தைத் திருப்பித் தந்துவிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்படும் வரை வங்கி கணக்கிலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்கக்கூடாது என்று சீதா தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் சீதா அந்த ஊரார் மத்தியிலும் இணையத்திலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரிகள், தொழில்நுட்பப் பிழையே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளனர். இருந்தபோதிலும் இந்தச் சம்பவம் வங்கிச் செயல்பாடுகளின் துல்லியம் குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளது.







