கடலூர் மாவட்டம் கங்கைகொண்டான் பேரூராட்சியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகேயுள்ளது கங்கைகொண்டான் பேரூராட்சி. இப் பேரூராட்சியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள 9 மற்றும் 10 வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு கடந்த 15 நாட்களாக பேரூராட்சியின் சார்பில் வழங்கப்படும் குடிநீர் வழங்கபடவில்லை எனக் கூறுகின்றனர்.
ஆனால் குடிநீர் வரியை வசூல் செய்வதில் மட்டும் குறியாக இருக்கும் நிர்வாகம் அதனை முறையாக தருவதில் அக்கறை காட்டுவதில்லை எனக்கூறி காலிக்குடங்களுடன்
இன்று திடீரென பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மந்தாரக்குப்பம் காவல்துறையினர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
–வேந்தன்







